விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி, தொழிலாளர்களுக்கு 3 மாதங்களுக்கு தலா 5000 ரூபாய் - மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்தும், தொழிலாளர்களுக்கு 3 மாதங்களுக்கு தலா 5000 ரூபாய் வழங்கிட மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,
கோவிட்-19 ஊரடங்கின் பாதிப்பு இன்னும் எத்தனை மாதங்களுக்கு என்ற தூரமும், திசையும், எல்லையும் அறியாத துயரத்திலும், திகைப்பிலும் இருக்கும் நமது விவசாயிகளுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், தெருவோர வியாபாரிகளுக்கும், உடனடியாகப் பயனளிக்கும் ஆக்கபூர்வமான நிவாரணங்களைக் கொடுக்காமல் - அலங்காரப் பேச்சுகள் மூலம் ஏமாற்றி விடலாம் என்று இன்னமும் கூட மத்திய பா.ஜ.க. அரசு நினைத்துக் கொண்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. 20 லட்சம் கோடி நிவாரணம் என்ற பா.ஜ.க.,வின் அரசியலுக்கான தலைப்புச் செய்தி - ஏழை எளிய மக்களுக்கு ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதைப் பிரதிபலிக்கும் வகையிலேயே மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களின் இரண்டாவது நாள் அறிவிப்பும் இருக்கிறது.
இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியான திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டு வரும், 5000 ரூபாய் நிதியுதவியையோ, அல்லது அகில இந்திய காங்கிரஸ் வலியுறுத்தியுள்ள 7500 ரூபாய் நிதியுதவியையோ, பணமாக, நேரடியாக, உடனடியாக வழங்க மனமின்றி - குறிப்பாக விவசாயிகளுக்கு மேலும் கிரெடிட் கார்டு கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். அதேபோல் நடைபாதை வியாபாரிகளுக்குப் பத்தாயிரம் ரூபாய் கடனாம். அதுவும் வறுமை பற்றி எரிந்து கொண்டிருக்கும் நேரத்தில் - வாழ்வாதாரம் கண்ணுக்கு எட்டும் தொலைவில் இல்லாத நிலையில், இன்னும் ஒரு மாதம் கழித்து அந்தத் திட்டம் வருமாம். வீடு தீப்பிடித்து எரியும்போது, உடனடியாகக் கிடைக்கும் தண்ணீரையும், மண்ணையும் வாரி இறைத்து அணைத்திட முயற்சிப்பதைப் போன்றது, பணமாகக் கொடுக்கப்படும் நிவாரண உதவி. தீ பற்றி எரியட்டும்; அவசரப்பட வேண்டாம்; தீயணைப்பு நிலையத்திற்குச் செய்தி அனுப்பி இருக்கிறோம்; அங்கிருந்து வண்டி வரட்டும்; பொறுத்திருங்கள் என்று சொல்வதைப் போல இருக்கின்றன மத்திய நிதி மந்திரியின் அறிவிப்புகள். சாலை விபத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு அங்கேயே முதல் உதவி செய்யாமல், இரத்தம் கொட்டட்டும்; தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை செய்து கொள்ளலாம்; அதுவரை வலியைப் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதைப் போல இருக்கின்றன அந்த அறிவிப்புகள். முதல் உதவியைப் போன்றது, உடனடியாகக் கொடுக்கப்படும் நிவாரணப் பணம். ஏற்கனவே வாங்கிய கடனையே திருப்பிச் செலுத்த முடியாமல், பல நூறு கணக்கில் தற்கொலை செய்து கொண்டிருக்கும் இந்திய விவசாயிகள் தலையில் மீண்டும் கடன் என்ற பாறாங்கல்லை ஏற்றி வைப்பது எந்த வகை நிவாரணம்? சுமை தாங்கியாக ஆறுதல் தாருங்கள் என்று கேட்டால், பிடி இந்த மூட்டையையும் தலையில் வைத்துக்கொள் என்பது எந்த வகைப் பரிவு? என்ன வகை நியாயம்?
நிதி மந்திரியின் இந்த நீண்ட நேரச் சொற்பொழிவுக்குப் பதிலாக கலைஞர் 7000 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்தது போல் - தி.மு.க. பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 60 ஆயிரம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்தது போல் - ஒரே கையெழுத்தில், இந்திய விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்து - மீளாத் துயரில் மூழ்கிக் கிடக்கும் அவர்களைக் கைதூக்கிக் கருணை காட்டிட ஏன் மத்திய நிதிமந்திரி முன்வரவில்லை?
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இரு மாதங்களுக்கு ரேசன் வழங்குகிறோம் என்றால் என்ன பொருள்? உடனடியாகப் பசிப்பிணி தீர்க்கும் இந்தியாதான் இன்றைய அவசரத் தேவையே தவிர, மேக் இன் இந்தியாவோ, ஸ்டேன்ட் அப் இந்தியாவோ அல்ல. இந்தியர்களுக்கு உணவளித்திட வேண்டியது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசின் கடமை. அதைத் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டமும் உறுதி செய்கிறது. சட்டப்படியான கடமையை நிறைவேற்றுவதை நிவாரணமாக அறிவிப்பதற்குப் பதில் ஏன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் நேரடியாகப் பண உதவி செய்து அவர்களை மன அழுத்தத்திலிருந்தும் வறுமையின் கோரப் பிடியிலிருந்தும், வாட்டி வதைத்திடும் ஏழ்மையிலிருந்தும் வெளியே கொண்டு வரக்கூடாது?
31.03.2020 அன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த “நிலை அறிக்கையில்” (Status Report) மத்திய உள்துறை செயலாளரே 4.14 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான் நாட்டில் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கும் போது - மத்திய நிதிமந்திரி ரேசன் வழங்குவதால் எப்படி 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்பது புலப்படவில்லை? ஏன் இத்தகைய முரண்பாடு? பேரிடர் நேரத்திலும் வழக்கம் போல் பகட்டு அறிவிப்புகளை வெளியிட்டு பாலிடிக்ஸ் செய்வதைத் தயவு செய்து தவிர்த்து விட்டு, கோவிட்-19 துயரில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் ஏழை எளிய நடுத்தரப் பிரிவு மக்களைக் காப்பாற்றும் நேரடி நிதியுதவி நடவடிக்கைகளில் மத்திய நிதிமந்திரி மேலும் தாமதிக்காமல் ஈடுபட வேண்டும்; இனி தாமதம் உயிர்களைப் பலிகொண்டுவிடும் என்ற கசப்பான உண்மையை மத்தியில் ஆளவந்தார் உணர்ந்திட வேண்டும். ஆகவே, விவசாயிகளின் அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு தலா 5000 ரூபாய் வழங்கியும், எண்ணற்ற ஏழை, எளிய தாய்மார்கள் உட்பட ஒரு கோடிக்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் நேரடி பண உதவி வழங்கியும் பாதிக்கப்பட்ட அனைவரையும் வறுமை, வெறுமை ஆகிய பலிபீடத்திலிருந்து மீட்டுப் பாதுகாத்திட வேண்டும்.
அதைவிடுத்து லேவா தேவி (Money Lending) நடத்துவதும், பணம் கொடுக்க முடியாது, இந்தா கடன் வாங்கிக் கொள் என்று சொல்வதும், குறைந்தது ஐம்பது சதவிகித இந்தியர்களுக்கு எந்த வகையிலும் உதவாது. ஆபத்துக்கு உதவாப் பிள்ளை, அரும்பசிக்கு உதவா அன்னம், தாபத்தைத் தீராத் தண்ணீர் போன்றதுதான் மத்திய பா.ஜ.க. அரசின் ஆரவாரமான அறிவிப்புகள்; எனவே உப்பரிகையிலேயே வீற்றிருந்து உலகத்தைப் பார்க்காமல், சற்று கீழே இறங்கிவந்து நாட்டின் நிதர்சனமான நிலை கண்டு, கருணை மழை பொழிந்திட வேண்டும் என்று திமுக சார்பில் மத்திய அரசை மிகுந்த அன்புடன் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story