மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் 14 நாட்கள் தனிமை: வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை - தமிழக அரசு உத்தரவு


மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் 14 நாட்கள் தனிமை: வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை - தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 16 May 2020 3:30 AM IST (Updated: 16 May 2020 1:53 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் நபர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள் என்றும், வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கொரோனா ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் நபர்களை அழைத்து வருவது சம்பந்தமாக ஏற்கனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வெளி மாவட்டங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் நபர்களுக்கு தொற்று அறிகுறிகள் இருந்தால் மட்டும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். மற்றவர்கள் வீட்டு தனிமையில் 14 நாட்கள் இருக்க வேண்டும்.

டெல்லி, குஜராத், மாராட்டியம் உள்ளிட்ட தொற்று அதிகமுள்ள ‘ஹாட்ஸ்பாட்’ மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட வேண்டும். உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட வேண்டும். உறுதி செய்யப்படவில்லை என்றால் அரசு இடத்தில் 7 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.

7 நாட்களுக்குப் பிறகு அறிகுறி தென்படவில்லை என்றால் வீட்டு தனிமைக்கு அனுப்பப்பட வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்த வசதி இல்லை என்றால் அரசு இடத்தில் மீதம் 7 நாள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

மற்ற மாநிலங்களில் இருந்து வருகிறவர்களுக்கு பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரிய வந்தால், வீட்டிலோ அல்லது அரசு இடத்திலோ 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து விமான நிலையங்களுக்கு வருகிறவர்களுக்கு தொற்று உறுதியாகவில்லை என்றால் அரசு இடம் அல்லது ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். தொற்று இருந்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். 7 நாட்களுக்குப் பிறகு பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்றால் 14 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுதலுக்கு அனுப்பிவிடலாம்.

சிலருக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள், கடுமையாக நோய்வாய்ப்பட்டவர், உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படக் கூடியவர், குடும்ப உறுப்பினர் இறப்புக்கு செல்லக்கூடியவர், கர்ப்பிணிகள், 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆகும்.

இதில், இறப்புக்கு சென்றவர், ஆரம்பகட்ட பரிசோதனைக்குப் பிறகு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட வேண்டும். மற்றவர்களை பரிசோதித்து சோதனை முடிவு வந்து, தொற்று இல்லை என்று தெரியவந்தால் தனிமையில் இருக்கும்படி வீட்டுக்கு செல்ல அனுமதிக்கலாம். தேவையானவர்களுக்கு ஆம்புலன்சில் செல்ல ஆலோசனை வழங்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story