மதுக்கடைகள் இன்று மீண்டும் திறப்பு - சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கை
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, தமிழகத்தில் மதுக்கடைகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு 500 பேருக்கு டோக்கன் வழங்கி மது விற்கப்படும்.
சென்னை,
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கடந்த 7-ந் தேதி டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில், நிபந்தனைகள் எதையும் அரசு பின்பற்றவில்லை என்றும், இதனால் மதுவிற்பனையின் காரணமாக கொரோனா தீவிரமாக பரவும் ஆபத்து இருப்பதாகவும், எனவே மதுக்கடைகளை மூட உத்தரவிடவேண்டும் என்றும் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை 8-ந் தேதி விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டனர். ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அரசு விரும்பினால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு, வீடுகளுக்கே நேரடியாக சென்று விற்பனை செய்யும் (‘டோர் டெலிவரி’) முறையை மேற்கொள்ளலாம் என்று கூறினார்கள்.
இதனால் 2 நாள் விற்பனைக்கு பிறகு மதுக்கடைகளை தமிழக அரசு இழுத்து மூடியது.
ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், எஸ்.கே.கவுல், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுக்கடைகளை மூடுமாறு சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று (சனிக்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில வாணிப கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உச்சநீதி மன்ற ஆணையை தொடர்ந்து, மதுபான கடைகள் நாளை (அதாவது இன்று) முதல் திறக்கப்படும். பெருநகர சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்படமாட்டாது.
500 ‘டோக்கன்’கள்
மேலும் மால்கள், வணிக வளாகங்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் இக்கடைகள் இயங்காது. மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் வழங்கப்படும்.
கடைக்கு வரும் அனைவரும் முக கவசம் கண்டிப்பாக அணியவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story