தகவல் பரிமாற்றத்துக்கு ஏதுவாக செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கு உதடு மறைவற்ற முக கவசங்கள் - அரசு தகவல்
செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கு தகவல் பரிமாற்றத்துக்கு ஏதுவாக உதடு மறைவற்ற முக கவசங்கள் வழங்கப்படுகின்றன.
சென்னை,
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இக்காலங்களில் மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்கும் வகையில் அவர்களின் அன்றாட தேவைகளை மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த வகையில் வழங்க பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
அதனைத்தொடர்ந்து, செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுடன் பெற்றோர், பாதுகாவலர், பயிற்சியாளர்கள், உடன் பணிபுரிபவர்கள் உரையாடும் சமயம் முகத்தின் உதடு அசைவு மூலம் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளும் வகையில் பிரத்யேகமாக உதடு மறைவற்ற முக கவசங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த முக கவசங்களை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகங்கள் மூலம் செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள், காதுகேளாத ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், காதுகேளாத சிறப்பு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுடன் பணிபுரிபவர்கள் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு வழங்கும் விதமாக திட்டமிடப்பட்டு தமிழ்நாட்டில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் காதுகேளாத நபர்கள் பிறருடன் தகவல் பரிமாற்றம் செய்யும்போது பிறரின் உதடு அசைவு மூலம் உரையாடலை தெளிவாக அறிவதற்கு மிகுந்த பயன் உள்ளதாக அமையும்.
இத்திட்டத்தின் மூலம் ரூ.12.15 லட்சம் செலவில் 13 ஆயிரத்து 500 செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு 81 ஆயிரம் உதடு மறைவற்ற முக கவசங்கள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story