மாநில செய்திகள்

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? - மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Migrant workers To be sent home What action has been taken? Central and State Governments Explain High Court orders

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? - மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? - மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
ஊரடங்கில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, 

மராட்டிய மாநிலம், சங்லி மாவட்டத்தில் சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்டுள்ள 400 தமிழர்களை மீட்க கோரி வக்கீல் சூரியபிரகாசம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது, வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்க 19 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும், அவர்களது தொலைபேசி எண், இ-மெயில் உள்ளிட்ட விவரங்களை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய உள்துறை செயலாளர், தமிழக தலைமை செயலாளர் ஆகியோரை எதிர்மனுதாரராக தாமாக முன்வந்து சேர்த்தனர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த ஊரடங்கு காலத்தில் ஒட்டுமொத்த தேசத்துக்கே உணவு அளித்தது விவசாயிகள் மட்டுமே. வேறு எந்த துறையை சேர்ந்தவர்களும் இல்லை. இதன்மூலம் இந்த உலகத்துக்கு விவசாயம்தான் மிக முக்கியமானது என்று இந்த ஊரடங்கு மூலம் நிரூபணமாகியுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது படும் வேதனைகள் குறித்து பத்திரிகைகளில் வரும் செய்திகளை பார்க்கும்போது யாராலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது.

வேலை பார்க்கும் மாநிலத்தின் அரசு மட்டுமல்ல தங்களது சொந்த மாநில அரசும் உதவிகள் எதுவும் செய்யாததால், அந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் நெடுஞ்சாலைகளிலும், ரெயில்வே தண்டவாளங்களிலும் நடந்தே சொந்த ஊருக்கு உணவின்றி பட்டினியும், பசியுமாக செல்கின்றனர். இதில் பலர் மரணமும் அடைந்துள்ளனர். இதை தடுக்க வேண்டும்.

முதல் கட்டமாக அனைத்து மாநிலங்களிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேர் உள்ளனர்? என்பதை கணக்கு எடுக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அழைத்துவர மத்திய அரசுடன், பிற மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுகிறதா? என்பதை அறிய மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்.

ஒவ்வொரு மாநிலங்களிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேர் சிக்கி உள்ளனர்? அவர்களது சொந்த மாநிலம் எது? நடந்தே சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்களில் எத்தனை பேர் இறந்துள்ளனர்? நடந்து செல்வோர் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகின்றனரா? அவர்கள் உணவு, இருப்பிடம் வசதிகள் செய்துக் கொடுக்கப்படுகிறதா?

தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பிற மாநிலங்களில் இருந்த சொந்த மாநிலத்துக்கு வரும் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதங்களை மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ளதா? என்பது குறித்து விரிவான பதிலை மத்திய மாநில அரசுகள் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறைகளை தெரிவிக்கலாம் - கலெக்டர் ஷில்பா தகவல்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறைகளை தெரிவிக்கலாம்என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
2. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு விமானங்களில் பயணம்: நடிகர் அமிதாப் பச்சன் சிறப்பு ஏற்பாடு
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு விமானங்களில் பயணம் செய்வதற்கு, நடிகர் அமிதாப் பச்சன் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்.
3. புலம் பெயர்ந்த 827 தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு மாவட்ட நிர்வாகம் தகவல்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 827 பேர் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அவர்களது சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கண்ணன் தெரிவித்தார்.
4. புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பயண செலவை அரசே ஏற்கும் - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பயண செலவை அரசே ஏற்கும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
5. சேலத்தில் இருந்து ரெயில் மூலம் 347 தொழிலாளர்கள் ராஜஸ்தான் புறப்பட்டனர்
சேலத்தில் இருந்து ரெயில் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 347 பேர் அவர்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அவர்களை மாவட்ட கலெக்டர் ராமன் வழியனுப்பி வைத்தார்.