கொரோனா பரவுவதை பாஜக அரசால் தடுக்க முடியாது; தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே ஒரே வழி - ப.சிதம்பரம்


கொரோனா பரவுவதை பாஜக அரசால் தடுக்க முடியாது; தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே ஒரே வழி - ப.சிதம்பரம்
x
தினத்தந்தி 17 May 2020 8:43 AM GMT (Updated: 17 May 2020 8:43 AM GMT)

ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது, அரசு என்ன செய்யப் போகிறது? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

சுயசார்பு திட்டத்தின் கீழ் மத்திய நிதிமந்திரி வெளியிட்ட அறிவிப்புகள் ஏழை மக்கள், புலம் பெயர் தொழிலாளர்கள், தினக் கூலிகள், வேலையிழந்த தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் ஆகியோருக்கு பயன் அளிக்காத வகையில் உள்ளதாக முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  அவர் நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், மத்திய நிதி மந்திரியின்  2வது தவணை அறிவிப்பில் மட்டுமே புலம் பெயர்ந்தோருக்கு தலா 10 கிலோ தானியத்திற்கு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மட்டும் வழங்கப்பட்டதாகவும், 3வது, 4வது தவணை அறிவிப்புகளில் ஒன்றும் இல்லை என விமர்சித்துள்ளார்.  

இந்தநிலையில் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

நேற்று கொரோனா தொற்று 4675 பேருக்குப் பரவியது. தற்காப்பு நடவடிக்கைகளை ஒவ்வொரு மனிதரும் மேற்கொண்டு தொற்றுலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே ஒரே வழி. கொரோனா தொற்று பரவுவதை பாஜக அரசால் தடுக்க முடியாது. காரணம், அரசின் நிர்வாக இயந்திரம் பழுதடைந்து கிடக்கிறது, இதைச் செய்யக் கூடிய உள்ளாட்சி அமைப்புகள் பல மாநிலங்களில் கிடையாது அல்லது அதிகாரங்களில்லாமல் இருக்கின்றன
ஊரடங்கு 3.0 இன்றுடன் முடிவடைகிறது. அரசு என்ன செய்யப் போகிறது? என பதிவிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில்,

முன்னணி தொழிலதிபர்கள் திரு அசீம் பிரேம்ஜியும் திரு வேணு சீனிவாசனும் காங்கிரஸ் கடசியின் முக்கிய கோரிக்கையை ஆதரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் புலம் பெயர்ந்து வீடு திரும்பும் தொழிலாளருக்கும் மாதம் ரூ 5000-7000 என்று மூன்று மாதங்களுக்குத் தர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.

Next Story