ஒன்றிணைவோம் வா திட்ட வரவேற்பை கண்டு பாண்டியராஜன் பதறுகிறார் - தங்கம் தென்னரசு தாக்கு


ஒன்றிணைவோம் வா திட்ட வரவேற்பை கண்டு பாண்டியராஜன் பதறுகிறார் - தங்கம் தென்னரசு தாக்கு
x
தினத்தந்தி 18 May 2020 1:30 AM IST (Updated: 18 May 2020 1:16 AM IST)
t-max-icont-min-icon

ஒன்றிணைவோம் வா திட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை கண்டு அமைச்சர் பாண்டியராஜன் பதறுகிறார் என்றும், மக்களை காக்கும் கரமாக மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்றும் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் திட்டத்தை காப்பி அடிக்கிறார் என்று அமைச்சர் க.பாண்டியராஜன் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை, கொரோனா காலத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்த பின்னர், தமிழ்நாடு முழுக்க எந்தப் பாகுபாடும் இன்றி லட்சக்கணக்கான மக்கள் உணவுப் பொருட்களையும், மருத்துவ உதவிகளையும் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

பேரிடர் சூழலில் தங்களைக் காக்கும் கரங்களாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நம்புவதால் தான் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் தேவைகளைக் கோரியிருக்கின்றனர்.

ஒன்றிணைவோம் வா திட்டத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பைக் காணச் சகிக்காத வயிற்றெரிச்சலால் இன்றைக்கு அம்மிக்குழவியை எடுத்து அடிவயிற்றில் இடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அமைச்சர் பாண்டியராஜனோ கொரோனா பிடியில் கடந்த இரு மாதங்களாக வாழ்வாதாரம் இழந்து ஏழை மக்கள் கண்ணீர் மல்க கைபிசைந்து நிற்கையில் ஓடோடிப்போய் அதைத் தடுத்து நிவாரணம் வழங்காமல் கடந்த வருடம் முதல்-அமைச்சர் அறிவித்த ஏதோ ஒரு திட்டத்தைச் சொல்லி விளம்பர சுகம் காண விழைகின்றார்.

மக்களுக்கு இனியாவது முழுமையான நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். தி.மு.க.வுக்கு மக்களிடையே எற்பட்டிருக்கும் பெரும் செல்வாக்கையும், ஒன்றிணைவோம் வா திட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பையும் கண்டு அமைச்சர் பாண்டியராஜன் பதறுவதை விடுத்து ஆக்கபூர்வமான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளட்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story