கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தனிசிறப்பு தேர்வு மையங்கள் - கல்வித்துறை தகவல்


கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தனிசிறப்பு தேர்வு மையங்கள் - கல்வித்துறை தகவல்
x
தினத்தந்தி 18 May 2020 3:30 AM IST (Updated: 18 May 2020 2:31 AM IST)
t-max-icont-min-icon

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தனிசிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை, 

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. தேர்வுக்கான ஆயத்த பணிகளில் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் அந்தந்த பள்ளிகளிலேயே அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

அதில் குறிப்பிடத்தக்கவையாக, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் எத்தனை பேர்? அது இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் எவ்வளவு பேர்? என்பது குறித்த தகவல்களை கல்வித்துறை பட்டியலாக தயாரித்து இருக்கிறது.

அதன் அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு என்று அந்தந்த பகுதிகளில் தனிசிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்கள் பொதுவான தேர்வு மையங்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது. அதற்கான பணிகளில் தேர்வுத்துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர, தேர்வுக்கான ஆயத்த பணிகள் குறித்து ஆராய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு, முதல்-அமைச்சரை சந்திக்கிறாரா? அல்லது முதல்-அமைச்சரை சந்தித்த பின், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறாரா? என்ற விவரங்கள் தெரியவில்லை.

இந்த ஆலோசனைக்கு பிறகு, தேர்வுக்கான அடுத்த கட்ட பணிகள் குறித்த முக்கிய அறிவிப்பை செங்கோட்டையன் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வந்து தங்களுடைய பணிகளையும் மேற்கொள்ள இருக்கின்றனர். அவர்களும் இன்று முதல் தேர்வுக்கான பணிகளில் ஈடுபட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story