இடையூறுகளை எதிர்கொண்டு நாட்டை திறம்பட கொண்டு செல்வதுதான் தலைமைப்பண்பு - மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்


இடையூறுகளை எதிர்கொண்டு நாட்டை திறம்பட கொண்டு செல்வதுதான் தலைமைப்பண்பு - மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்
x
தினத்தந்தி 18 May 2020 4:30 AM IST (Updated: 18 May 2020 2:37 AM IST)
t-max-icont-min-icon

‘இடையூறுகளை எதிர்கொண்டு அதற்கு பின்னால் நாட்டை திறம்பட கொண்டு செல்வதே மோடியின் தனிச்சிறப்பு’ என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

மத்திய தகவல் ஒலிபரப்பு, சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாட்டின் தலைமைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் நெருக்கடியான சோதனைகள் வந்துகொண்டே இருக்கின்றன. கொரோனாவால் ஏற்படும் ஆபத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்கூட்டியே அறிந்து சாதுர்யமாகவும், சிறப்பாகவும் செயல்பட்டதாலேயே, மற்ற நாடுகளை விடவும் இந்தியாவில் அதன் பரவல் குறைவாகவே இருந்தது. அதனால் பெரும்சேதத்தில் இருந்து நாட்டை காப்பாற்றி இருக்கிறார் என்று அவரை தேசிய அளவிலும், உலக நாடுகளும் பாராட்டுகின்றன.

இயல்பான காலங்களில் தலைமைப்பண்பை வழங்குவது சவாலாக இருக்காது. ஆனால் சிறந்ததையும், மற்றதையும் வேறுபடுத்துவது கடினம். கொரோனாவை உலக அளவில் தலைமைப்பண்புக்கு ஏற்பட்ட சோதனை. இந்த சோதனையில் இடையூறுகளை வென்று, பிரதமர் நரேந்திர மோடி ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், வைரசுக்கு எதிராக ஒரு துடிப்பான போராட்டத்தை இந்தியா நடத்துகிறது. கொரோனா நெருக்கடிக்கு பின்னர் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளுக்காக இந்தியா தன்னைத்தானே தயார்படுத்திக்கொள்கிறது. இதற்காக முன்னோக்கி அடியெடுத்து வைக்கிறது.

தன்னம்பிக்கைக்காக தெளிவான அழைப்பை (ரூ.20 லட்சம் கோடி பொருளாதார தொகுப்பு) மோடி விடுத்தார். இதையடுத்து தொடர்ச்சியாக 5 நாட்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்திய வரலாற்றில் திருப்புமுனையான இந்த நடவடிக்கைகளை வரலாறு எப்போதும் நினைவுகூரும். எதிர்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமான ஒவ்வொரு துறையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் சீர்திருத்தத்தை கண்டுவருகிறது. ஏழைகள், சாலையோர வியாபாரிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், டிரைவர்கள் என பல்வேறு தரப்பினருக்காக ஏராளமான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் வேளாண்துறை ஆகியவைதான் அதிக தொழிலாளர்களை இந்தியாவில் கொண்டிருக்கிறது. ஆகையால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்காகவும், வேளாண்மை துறை மேம்பாட்டுக்காகவும் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. ரூ.20 லட்சம் கோடி பொருளாதார தொகுப்பு கொரோனாவுக்கு பிந்தைய இந்தியாவுக்கு ஒரு நல்ல வடிவத்தை கொடுக்கும்.

இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்த பிறகும் மக்களின் கைகளில் அரசு பணத்தை கொண்டு சேர்க்கவில்லை என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு கொஞ்சம் மறந்திருக்கக்கூடும். ஏனெனில் முன்னதாக ஏழைகளுக்காக ரூ.1.7 லட்சம் கோடி நிவாரண தொகுப்பு அறிவிக்கப்பட்டது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, கொடுக்கும் வெற்று அறிவிப்புகளை போன்று இல்லாமல், நாங்கள் எதையெல்லாம் அறிவித்தோமோ, அதனை எல்லாம் செயல்படுத்துகிறோம்.

39 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் சுமார் ரூ.35 ஆயிரம் கோடி நிதி உதவி பெற்றிருக்கிறார்கள். இதில் 8 கோடி விவசாயிகள் தலா ரூ.2 ஆயிரம் பெற்றிருப்பது, 20 கோடி ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருக்கும் பெண்கள் முதல் மற்றும் 2-வது தவணையாக நிதி உதவி பெற்றிருப்பதும் அடங்கும். மாநில அரசுகள் கடன் வாங்கும் அளவு மாநில ஜி.டி.பி.யின் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இது மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.4 லட்சம் கோடி கிடைப்பதை உறுதி செய்வதாக இருக்கும். இதுபோன்ற எண்ணற்ற சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

உண்மையான தலைமைப்பண்பு என்பது சீர்திருத்தத்தை ஊக்குவிப்பது ஆகும். உருமாறும் தலைமைப்பண்பு என்பது உடனடியாக ஏற்படும் சவால்களில் சிக்கி கொள்ளாமல், முன்பை விடவும் நாட்டை வலுவானதாக மாற்றுவது ஆகும். உலகளாவிய நெருக்கடிக்கு பின்னர் உலக ஒழுங்குமுறையே மாறிவிட்டது என்பதை வரலாறு காட்டுகிறது.

இந்த நேரத்தில் இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி வழிநடத்தியது நமக்கு கிடைத்த அதிர்ஷ்டம். கடந்த வாரத்தில் நடந்த நடவடிக்கைகள் நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவர் அந்த வாய்ப்புகளை முழுமையாக புரிந்துகொள்கிறார். இதுதான் பிரதமர் மோடியின் தனிச்சிறப்பு ஆகும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story