இன்று முதல் 200 பேருந்துகள் இயங்கும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம்


இன்று முதல் 200 பேருந்துகள் இயங்கும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம்
x
தினத்தந்தி 18 May 2020 11:37 AM IST (Updated: 18 May 2020 11:43 AM IST)
t-max-icont-min-icon

4-வது கட்டமாக ஊரடங்கு: சென்னையில் மக்கள் நடமாட்டமும், சாலைகளில் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இன்று முதல் 200 பேருந்துகள் இயங்கும்

சென்னை

தமிழகத்தில் 4 வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 54 நாட்களுக்கு பின்னர் அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கி உள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஏற்கனவே 3 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் 4வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதே சமயம் கொரோனா தாக்கம் குறைந்த 25 மாவட்டங்களில் ஏற்கனவே அறிவித்த தளர்வுகளுடன், மேலும் பல புதிய தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.

ஆனால் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் புதிதாக எவ்வித தளர்வுகளுமின்றி ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி 4 ஆம் கட்ட ஊரடங்கு இன்று அமலுக்கு வந்ததை அடுத்து, புதிதாக தளர்வுகள் வழங்கப்பட்ட 25 மாவட்டங்களில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பியுள்ளது. சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்படுவதோடு, மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. 54 நாட்களுக்கு பின்னர் அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட துவங்கியுள்ளன.

ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டதன் காரணமாக சென்னையில் மக்கள் நடமாட்டமும், சாலைகளில் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது.

மாநில அரசின் வழிகாட்டுதல்படி தொழில்நிறுவனங்கள் இயங்கத் தொடங்கி இருக்கின்றன. அலுவலக வாகனங்கள், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து ஊழியர்களை அழைத்துச் செல்கின்றன.

இதனால் அண்ணா சாலை, கிண்டி, ராஜிவ் காந்தி சாலைகளில் இரண்டு மாதங்களுக்கு பிறகு போக்குவரத்து அதிகரித்து காணப்படுகின்றது.

இந்த நிலையில், அத்தியாவசியம் மற்றும் அவசரப் பணிகளுக்காக ஏற்கனவே, மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இன்று முதல் அரசு அலுவலகங்கள் 50 சதவிகித பணியாளர்கள் உடன் இயக்கும் என்று அறிவிக்கப்பட்டதால், இன்று முதல் 200 பேருந்துகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவை, அவசரப்பணி, 50 சதவீத அரசு ஊழியர்களுக்காக மார்ச் 25 முதல் 175 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்வால் இன்று முதல் கூடுதலாக 25 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story