வழிபாட்டு தலங்கள் திறப்பு இல்லை - ஐகோர்ட்டில் வழக்கு தள்ளுபடி


வழிபாட்டு தலங்கள் திறப்பு இல்லை - ஐகோர்ட்டில் வழக்கு தள்ளுபடி
x
தினத்தந்தி 18 May 2020 8:30 PM GMT (Updated: 18 May 2020 7:35 PM GMT)

தமிழகத்தில் கோவில், தேவாலயம், மசூதி உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறக்க கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை திருமங்கலத்தை சேர்ந்தவர் ஆர்.கே.ஜலீல். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை படிப்படியாக மத்திய, மாநில அரசுகள் தளர்த்தி வருகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள கட்டுப்பாட்டு பகுதியை தவிர பிற பகுதிகளில் நிபந்தனைகளுடன் கடைகள் திறக்கப்படுகின்றன. சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள், பழுதுபார்க்கும் சேவைகள் உள்ளிட்ட பணிகளை சில கட்டுப்பாடுகளுடன் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. அண்மையில் மனிதனுக்கு அத்தியாவசியம் இல்லாத மதுக்கடைகள் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால், தேசிய அளவில் அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கினால், வருமானத்தை இழந்துள்ள பலர் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மன அமைதியை பெற இறை வழிபாட்டில் ஈடுபடுவார்கள். அதனால், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து வழிப்பாட்டு தலங்களையும் திறப்பது அவசியமாகிறது.

எனவே, அனைத்து மத வழிப்பாட்டு தலங்களையும் திறக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். தற்போது, புனித மாதமான ரம்ஜான் நோன்பு மாதம் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் தொழுகை நடத்த ஏதுவாக பள்ளிவாசல்களை திறக்கவும் அனுமதி வழங்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. காணொலி காட்சி மூலம் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன், ‘வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டால், சமூக இடைவெளியை எவ்வாறு கடைப்பிடிப்பது? உள்ளிட்ட எந்த ஒரு தீர்வையும் மனுதாரர் தரப்பில் கூறவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம், மத சுதந்திரத்தை வழங்கியுள்ளது. அதேநேரம், பொது சுகாதாரம், பொது அமைதிக்கு உட்பட்டுதான் அந்த சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள சூழ்நிலையில் வழிப்பாட்டு தலங்களை திறந்தால், பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. அதனால், வைரஸ் தொற்றும் மக்களிடையே அதிகம் பரவ வாய்ப்புள்ளது. எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது’ என்று வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன், ‘மே மாதம் இறுதிவரை ஊரடங்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. அந்த உத்தரவில், கோவில், தேவாலயங்கள், மசூதி உள்ளிட்ட வழிப்பாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் பணியில் சுகாதாரத்துறை, காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் வழிபாட்டு தலங்களை திறந்தால் கூட்டம் கூட்டமாக மக்கள் வருவார்கள். அந்த கூட்டத்தை கட்டுப்படுத்தும் நிலையில் தமிழக காவல்துறை இல்லை’ என்று வாதிட்டார். மனுதாரர் தரப்பிலும் பல கருத்துகளை முன்வைத்து வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘வழிபாட்டு தலங்களை திறக்க அரசுக்கு உத்தரவிட முடியாது. வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

Next Story