மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: தமிழகத்தில் மது விற்பனை நேரம் நீட்டிப்பு - இரவு 7 மணி வரை கிடைக்கும்


மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: தமிழகத்தில் மது விற்பனை நேரம் நீட்டிப்பு - இரவு 7 மணி வரை கிடைக்கும்
x
தினத்தந்தி 19 May 2020 3:30 AM IST (Updated: 19 May 2020 2:04 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மது விற்பனை நேரம் இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஒரு நாளைக்கு 500 டோக்கன் என்ற கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டு உள்ளது.

சென்னை, 

சுப்ரீம்கோர்ட்டு அனுமதியுடன் தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் கடந்த 17-ந்தேதி மீண்டும் திறக்கப்பட்டன. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர் ஆகிய 2 மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகளும், மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அருகாமையில் உள்ள மதுக்கடைகளும் திறக்கப்படவில்லை.

அதன்படி தமிழகத்தில் 3 ஆயிரத்து 600 கடைகளில் மது விற்பனை தொடங்கியது. கொரோனா மிரட்டலால் சமூக இடைவெளியை பேணி காக்கும் நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளில் நாளொன்றுக்கு 500 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கி மது விற்பனை நடைபெற்று வந்தது.

‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பது போல வெயிலில் கொடுமையில் இருந்து தப்பிக்கவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் குடைபிடித்து வந்தால் தான் மதுபானங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே மதுபிரியர்கள், கையில் குடையுடன் டாஸ்மாக் கடைகள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.

மதுபிரியர்கள் படையெடுப்பால் ‘டாஸ்மாக்’ கடைகளில் மளமளவென மதுபான வகைகள் விற்று வருகின்றன. அதன்படி கடந்த 17-ந்தேதி ரூ.163 கோடிக்கும், 18-ந்தேதி ரூ.133 கோடி என மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஒருவர் எவ்வளவு வேண்டும் என்றாலும் மது வாங்கி கொள்ளலாம் என்ற டாஸ்மாக் நிர்வாகத்தின் அறிவிப்பால், உற்சாகம் அடைந்த மதுபிரியர்கள் மனம் போன போக்கில் மதுபாட்டில்களை வாங்கி குவிக்கிறார்கள்.

அதே நேரத்தில் ஒரு நாளைக்கு 500 பேருக்கு மட்டுமே டோக்கன் வினியோகிப்பதால் பெரும்பாலான மது பிரியர்கள் மது கிடைக்காமல் வெறும் கையோடு வீடு திரும்பும் நிலை உள்ளது. எனவே மதுவிற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று மது பிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை கருத்தில் கொண்டு மது விற்பனை நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணி வரை என 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய நேர நடைமுறை நேற்றே அமலுக்கு வந்தது.

இதையடுத்து ஒரு நாளைக்கு 500 டோக்கன் என்ற கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டு உள்ளது.

மதுபிரியர்கள் கூட்டம், விற்பனை ஆகியவற்றை பொறுத்து ஒரு கவுண்ட்டர், 2 மற்றும் 3 கவுண்டர்கள் என ஒவ்வொரு ஏரியாவுக்கு ஏற்ப ‘டாஸ்மாக்’ மதுபானக்கடைகள் இயங்கி வருகின்றன. எனவே கடைகளில் உள்ள கவுண்ட்டர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இரவு 7 மணி வரையில் ஒரு நாளைக்கு எவ்வளவு பேருக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்ய முடியுமோ, விற்கலாம் என்று ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மது விற்பனை நேரம் அதிகரிப்பு, டோக்கன் கட்டுப்பாடு தளர்வு ஆகிய செய்தி மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்து உள்ளது.

Next Story