சென்னையில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியது - தமிழகத்தில் உயிரிழப்பு 81 ஆக உயர்வு
தமிழகத்தில் உயிரிழப்பு 81 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 536 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 117 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 11 ஆயிரத்து 760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 3 பெண்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.
தமிழக மருத்துவமனையில் 4 ஆயிரத்து 508 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். மேலும் விமான நிலைய முகாமில் இருந்தவர்களில் மேலும் 5 பேருக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 7 ஆயிரத்து 647 ஆண்கள், 4 ஆயிரத்து 110 பெண்கள் மற்றும் மூன்று 3-ம் பாலினத்தவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள னர். நேற்று 12 வயதுக்கு உட்பட்ட 46 குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 59 முதியவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 709 குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 871 முதியவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 43 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மொத்த எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் 500-ஐ கடந்த 3-வது மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story