புதிய அட்டவணை வெளியீடு: தமிழகத்தில் ஜூன் 1-ந் தேதி தொடங்க இருந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தள்ளிவைப்பு; 15-ந் தேதி தொடங்கும் என்று அறிவிப்பு


கோப்புக்காட்சி
x
கோப்புக்காட்சி
தினத்தந்தி 20 May 2020 5:45 AM IST (Updated: 20 May 2020 12:48 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஜூன் 1-ந் தேதி தொடங்க இருந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு ஜூன் 15-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை, 

கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கான தேர்வுகளை நடத்துவது பாதிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி தொடங்கி நடைபெற இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு, கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்பிறகு, தள்ளிவைக்கப்பட்ட பொதுத்தேர்வு நடைபெறுமா? ரத்து செய்யப்படுமா? என்ற பேச்சு பரவலாக எழுந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று முதல்-அமைச்சர் கூறினார்.

அதன்படி, கடந்த 12-ந் தேதி பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார். அதில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடைபெறும் என்றும், பிளஸ்-1 பொதுத்தேர்வின் இறுதிநாள் தேர்வு 2-ந் தேதியும், பிளஸ்-2 இறுதிநாள் தேர்வை எழுதாத தேர்வர்களுக்கு 4-ந்தேதி தேர்வு நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தற்போது 4-வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும், கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதாக கூறப்பட்ட நிலையிலும் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வை ஜூன் மாதம் 1-ந் தேதி நடத்துவது சரியாக இருக்காது என்று பெரும்பாலான பெற்றோர் கருத்து தெரிவித்தனர். கல்வியாளர்களும் இந்த தேர்வுகால அட்டவணைக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தனர்.

தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பொதுத்தேர்வை தள்ளிவைக்க வலியுறுத்தின.

இந்த நிலையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது தலைமைச் செயலாளர் க.சண்முகம், பள்ளிக்கல்வி துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

ஆலோசனைக்கு பிறகு, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மீண்டும் தள்ளிவைக்கப்படுவதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சருடன் ஆலோசித்த பிறகு, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தேதி மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஜூன் 15-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது. அனைவரின் வேண்டுகோளையும் முதல்-அமைச்சர் பரிசீலித்த பிறகு, தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது.

தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு இருக்கிறது. முதல்-அமைச்சரின் ஒப்புதல் பெற்று 2 நாட்களுக்குள் தெளிவாக வெளியிடப்படும். மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதற்கும், பெற்றோர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 31-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருப்பதால், எல்லோருடனும் கலந்து பேசியபிறகு, இந்த முடிவை முதல்-அமைச்சர் மேற்கொண்டு இருக்கிறார்.

அவரது ஒப்புதலோடு இந்த புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. அதன்படியே தேர்வு நடைபெறும். மற்ற மாநிலங்களில் உள்ள மாணவர்களை தேர்வு எழுத அழைத்து வருவதற்கான பணிகளை செய்து வருகிறோம். இன்னும் 2 நாட்களுக்குள் அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும். தேர்வு தொடர்பான முழு விவரங்களை மக்கள் தெரிந்து கொள்வதற்கு வசதியாக 2 நாட்களில் ஆணையாக வெளியிடப்பட உள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 14 நாட்களுக்கு பிறகு நிலைகள் மாற்றி அமைக்கப்படும். பல மாவட்டங்கள் வரக்கூடிய நாட்களில் பச்சை மண்டலங்களாக மாற வாய்ப்பு உள்ளது. எனவே அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் அப்போது எடுக்கப்படும். தேர்வுகளை பொறுத்தவரையில், அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.

ஒரு வகுப்பறைக்கு 10 பேர் என்ற முறையில் 12 ஆயிரத்து 690 தேர்வு மையங்கள் தற்போது உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அந்தந்த பள்ளிகளில் தேர்வு எழுதுவதற்கும், அதிகபட்சம் 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் தேர்வு எழுதுவதற்கு ஏதுவாகவும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு குறித்து நிலைமை சீரான பின்னர்தான் முடிவு மேற்கொள்ளப்படும்.

வருகிற 27-ந்தேதி முதல் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று, பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அதன் தொடர்ச்சியாக பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து, முடிவுகள் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு புதிய அட்டவணை

ஜூன் 15-ந்தேதி (திங்கட்கிழமை) - மொழிப்பாடம்

17-ந்தேதி (புதன்கிழமை) - ஆங்கிலம்

19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) - கணிதம்

20-ந்தேதி (சனிக்கிழமை) - விருப்ப மொழிப்பாடம்

22-ந்தேதி (திங்கட்கிழமை) - அறிவியல்

24-ந்தேதி (புதன்கிழமை) - சமூக அறிவியல்

25-ந்தேதி (வியாழக்கிழமை) - தொழிற்பாடம்

பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு:

இதுதவிர ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்ட பிளஸ்-1 பொதுத்தேர்வின் இறுதிநாள் தேர்வான வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் தேர்வுகள் ஜூன் 16-ந் தேதியும், பிளஸ்-2 இறுதிநாள் பொதுத்தேர்வான வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் தேர்வுகளை எழுதாத மாணவர்களுக்கு ஜூன் 18-ந் தேதியும் தேர்வு நடைபெற உள்ளது.

இந்த அனைத்து தேர்வுகளும் ஒவ்வொரு நாளும் காலையில் 3 மணி நேரம் நடைபெறும் என்று கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.

Next Story