தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்து 448 ஆக உயர்வு சென்னையில் 3 முதியோர் பலி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்து 448 ஆக உயர்ந்தது.
சென்னை,
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த 54 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்து 448 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் தமிழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த பலர் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் பாதிக்கப்படுவதை கண்டறிவது மிகவும் சவாலாக உள்ளது.
சென்னையில் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் சென்னையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையிலும் கடந்த 8 நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருமடங்கு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் புதிதாக 688 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 448 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 407 ஆண்களும், 281 பெண்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8 ஆயிரத்து 54 ஆண்களும், 4 ஆயிரத்து 391 பெண்களும், மூன்று 3-ம் பாலினத்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று பாதிக்கப்பட்டவர்களில், துபாயில் இருந்து வந்த 23 பேரும், மாலத்தீவில் இருந்து வந்த ஒருவரும், துபாய், மலேசியா, குவைத் ஆகிய நாடுகளில் இருந்து வந்து 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீடு திரும்ப இருந்த 13 பேரும், மராட்டியத்தில் இருந்து வந்த 49 பேரும், கேரளாவில் இருந்து வந்த ஒருவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 முதியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா மற்றும் பல்வேறு நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த 72, 82 வயது ஆண்களும், திருவள்ளூரை சேர்ந்த 64 வயது ஆணும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது.
தமிழக மருத்துவமனையில் நேற்று 489 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 4 ஆயிரத்து 895 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 19 மாவட்டங்களில் புதிதாக நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் 552 பேரும், செங்கல்பட்டில் 22 பேரும், நெல்லையில் 20 பேரும், கள்ளக்குறிச்சியில் 11 பேரும், திருவள்ளூரில் 8 பேரும், கரூர், தூத்துக்குடியில் தலா 6 பேரும், காஞ்சீபுரம், கன்னியாகுமரியில் தலா 5 பேரும், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், ராமநாதபுரம், கடலூர், தென்காசியில் தலா 2 பேரும், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, தேனி, திருச்சி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும், விமான நிலைய முகாமில் 36 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுவரை வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 54 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்து விமான நிலைய முகாம்களில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, வீடு திரும்ப இருந்த 18 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 12 வயதுக்கு உட்பட்ட 38 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 63 முதியவர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று புதிதாக 2 கொரோனா பரிசோதனை மையங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் நாமக்கல் அரசு மருத்துவமனையிலும், ஒரு தனியார் நிறுவனத்திலும் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தற்போது 40 அரசு மற்றும் 23 தனியார் என மொத்தம் 63 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் நேற்று 10 ஆயிரத்து 333 பேருக்கு சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சத்து 48 ஆயிரத்து 174 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story