ரத்தான ரெயில் டிக்கெட்டுக்கான கட்டணம் எப்போது திரும்ப கிடைக்கும்? காத்திருக்கும் பயணிகள்
கொரோனாவால் ரத்து செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டுகளுக்கான கட்டணம் எப்போது திரும்ப கிடைக்கும்? என்று பயணிகள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
சென்னை,
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அதனால் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்பட்ட டிக்கெட் கட்டணம் முழுவதும் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்படும். ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் வங்கி கணக்குகளுக்கு தானாக திருப்பி அனுப்பப்படும். கவுண்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டுகளை பயண தேதியில் இருந்து 6 மாதங்களுக்குள் கவுண்ட்டர்களிலேயே கொடுத்து ரத்து செய்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று ரெயில்வே அறிவித்தது.
முன்பதிவு செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டால் 3 அல்லது 4 வேலை நாட்களில் எந்த கணக்கில் இருந்து டிக்கெட் எடுக்கப்பட்டதோ, அந்த வங்கி கணக்குக்கு பணம் தானாக வந்து சேர்ந்துவிடும். சில நேரங்களில் மட்டுமே ஒரு வாரம் வரை எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்ட பல டிக்கெட்டுகளுக்கு இன்னும் பணம் வந்துசேரவில்லை.
சென்னையை சேர்ந்த ஒரு பயணிக்கு, கடந்த 8-ந் தேதிக்கான பயண டிக்கெட் ரத்து செய்யப்பட்டது தொடர்பான தகவல் 3 நாட்களுக்கு முன்பாக அதாவது 5-ந்தேதியே வந்து விட்டது. ஆனால் பணம்தான் இன்னும் வங்கி கணக்குக்கு வந்து சேரவில்லை. இதேபோல் கடந்த 14-ந் தேதிக்கான பயண டிக்கெட் ரத்து செய்யப்பட்டதற்கும் அவருக்கு இன்னும் பணம் திரும்ப கிடைக்கவில்லை.
ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டதா? என்று வங்கி கணக்கை அவ்வப்போது பலரும் சோதித்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ரெயில்களில் பயணம் செய்வதற்காக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் தாங்களாகவே, ரத்து செய்திருந்தால் பணம் தாமதமாக கிடைப்பதை ஏற்றுக்கொள்ளலாம்.
ரெயில்வே நிர்வாகம்தான் ஊரடங்கு காரணமாக, முன்பதிவு செய்த ரெயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தது. ஆகவே ரெயில்வே நிர்வாகம்தான் முழுவீச்சில் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு உரிய கட்டணத்தை திருப்பி செலுத்தவேண்டும். ஊரடங்கு காரணமாக நெருக்கடியில் தவிப்பதால் ரத்து செய்யப்பட்ட டிக்கெட் கட்டணம் பலருக்கு ஓரிரு நாட்கள் வாழ்க்கையை நகர்த்த உந்துகோலாக இருக்கும்.
டிக்கெட் கட்டணத்தை உரிய நேரத்தில் திருப்பி செலுத்தாததை பார்க்கும்போது, கொரோனாவால் ஒட்டுமொத்த துறைகளுமே முடங்கி கிடப்பதுபோல், ரெயில்வே துறைக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டுவிட்டதா? என்ற அச்சத்தை பயணிகள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. ரத்து செய்யப்பட்ட தங்கள் டிக்கெட்டுகளுக்கான பயண கட்டணம் எப்போது திரும்ப கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பில் பயணிகள் பலரும் காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார்கள்.
Related Tags :
Next Story