தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்று; 2 லட்சம் வாழைகள் சேதம் விவசாயிகள் பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் வீசிய பலத்த சூறைக்காற்றில் 2 லட்சம் வாழைகள் சாய்ந்து சேதம் அடைந்தன.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் வீசிய பலத்த சூறைக்காற்றில் 2 லட்சம் வாழைகள் சாய்ந்து சேதம் அடைந்தன. இதனால் 580 விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. நேற்றும் காலையில் பலத்த காற்று வீசியது.
இந்த காற்று தூத்துக்குடி மாவட்ட வாழை விவசாயிகளின் வாழ்க்கையை புரட்டி போட்டு உள்ளது. வழக்கமாக ஆடி மாதம் அதிக காற்று வீசும் என்பதால் விவசாயிகள் வாழை மரங்களுக்கு கம்புகள் கட்டி சரிந்து விடாமல் பாதுகாப்பார்கள். வைகாசி மாதத்தில் பெரிய அளவில் காற்று வீசுவது கிடையாது. இதனால் விவசாயிகள் தற்போதுதான் வாழைகளுக்கு கம்பு கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீசிய சூறைக்காற்று மாவட்டம் முழுவதும் வாழைப்பயிரை அடியோடு சாய்த்து விட்டது. குலைதள்ளிய வாழைகள், விளைந்தும், விளையாமலும் இருக்கும் வாழைத்தார்களும் இடுப்பு முறிந்த நிலையில் தலைகுப்புற கிடந்ததை கண்டு விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர். பட்டக்காலிலே படும் என்பது போன்று, ஏற்கனவே கொரோனாவால் மனம் நொந்து போன விவசாயிகளை இந்த சூறைக்காற்று மேலும் அவதிக்கு உள்ளாக்கி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி வட்டாரத்துக்கு உட்பட்ட அத்திமரப்பட்டி, கோரம்பள்ளம், குலையன்கரிசல், சிவத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 275 விவசாயிகள் 90 ஹெக்டேர் பரப்பில் பயிரிட்டிருந்த வாழை அடியோடு சாய்ந்து விட்டன. இதேபோல் தென்திருப்பேரை பகுதியில் 150 விவசாயிகள் 25 ஹெக்டேரில் பயிரிட்டிருந்த வாழையும், செய்துங்கநல்லூரில் 15 விவசாயிகள் 10 ஹெக்டேரில் பயிரிட்டிருந்த வாழையும், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 140 விவசாயிகள் 50 ஹெக்டேரில் பயிர் செய்திருந்த வாழையும் சாய்ந்து உள்ளன. இதில் சுமார் 2 லட்சம் வாழைகள் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், தூத்துக்குடி வட்டாரத்தில் 2 விவசாயிகள் 2 ஹெக்டேரில் பயிரிட்டிருந்த பப்பாளி மரங்களும் அடியோடு சாய்ந்து உள்ளன.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சரசுவதி மற்றும் அலுவலர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து பாதிப்பு விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story