சென்னையில் கொரோனா தொற்று அதிகம் இருக்கும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை


சென்னையில் கொரோனா தொற்று அதிகம் இருக்கும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை
x
தினத்தந்தி 20 May 2020 6:21 AM GMT (Updated: 20 May 2020 6:21 AM GMT)

சென்னையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடங்களை தனிமைப்படுத்தி, அந்த பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

தமிழகத்தில் சென்னையில்தான் அதிக பாதிப்பு இருந்து வருகிறது. சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 552 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 672 ஆக உயர்ந்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ராயபுரம் மண்டலத்தில் அதிக பாதிப்பு இருந்து வருகிறது.

இதையடுத்து சென்னையில் 758 இடங்கள் கொரோனா கட்டுபாட்டு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 130 இடங்களும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் 121 இடங்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 80 மற்றும் அம்பத்தூர் மண்டலத்தில் 77 இடங்களும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று சென்னையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. முதற்கட்டமாக ராயபுரம், திரு.வி.க. நகர், கோடம்பாக்கம் மண்டலங்களில் இன்று பரிசோதனை தொடங்கப்படுகின்றன. மேலும் பரிசோதனைகளை மேற்கொள்ள கூடுதலாக 500 சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story