மாநில செய்திகள்

ரம்ஜான் பண்டிகை: 700 இஸ்லாமியர்களுக்கு பரிசு பொருள், நிதி உதவி மு.க.ஸ்டாலின் வழங்கினார் + "||" + Gift material and financial aid to 700 Islamists   Presented by MK Stalin

ரம்ஜான் பண்டிகை: 700 இஸ்லாமியர்களுக்கு பரிசு பொருள், நிதி உதவி மு.க.ஸ்டாலின் வழங்கினார்

ரம்ஜான் பண்டிகை: 700 இஸ்லாமியர்களுக்கு பரிசு பொருள், நிதி உதவி மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கொளத்தூர் தொகுதியில் 700 இஸ்லாமியர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் நிதி உதவியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,

தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நலத்திட்ட உதவிகள்

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


வார்டு 66 பெரியார் நகர், திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 700 இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு பரிசுப்பொருட்களையும், நிதி உதவியையும் வழங்கினார். அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிலும் 17 இஸ்லாமிய மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களும், நிதி உதவியும் வழங்கினார்.

இஸ்லாமியர்களுக்கு உதவி

வார்டு 64 மீனாட்சி நகர், எவர்வின் பள்ளியில், 700 இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு பரிசுப்பொருட்களும், நிதி உதவியும் வழங்கினார். பின்னர், கடந்த 2018-ம் ஆண்டு 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற ஜாஹினா அப்ரின் என்ற மாணவிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்படிப்பிற்கான அனைத்து உதவிகளும் செய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, அம்மாணவியின் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை ஏற்கனவே வழங்கியிருந்தார். தற்போது மூன்றாம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை வழங்கினார்.

அடுத்ததாக, வி6 காவல் நிலையத்திற்கு என்.95 முககவசம் 25, 500 மில்லி லிட்டர் கிருமிநாசினி 25, 3 லேயர் முகக்கவசம் 500, சோப்பு 100 ஆகியவற்றை வழங்கினார்.

கொரோனா நோய் தடுப்பு குழுவில் மக்கள் பிரதிநிதிகள்

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், மாநகராட்சிகளிலும் சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ள அ.தி.மு.க. அரசு அந்தப் பகுதிகளில் உள்ள அமைச்சர்களையோ அல்லது மக்கள் பிரதிநிதிகளையோ அந்தக் குழுக்களில் இடம்பெறச் செய்யாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

இந்தப் பணியில் அதிகாரிகளுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் பயன்படுத்தினால்தான் சிறப்பாக இருக்கும். ஏனென்றால், மக்கள் தங்கள் குறைகளை அவர்களிடம்தான் நெருங்கி, தயங்காமல் கூறுவதற்கான வாய்ப்பு உருவாகும்; உடனடி கோரிக்கைகளை நிறைவேற்றிடவும் முடியும்.

ஒரு கை தட்டினால் ஓசை வராது

நோய்த் தொற்றை முறைப்படி தடுக்கவும், எங்கெங்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களோ அங்கெல்லாம் உள்ள மக்கள் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்- அமைச்சர் உணர வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்று நான் கூறுவது ஏதோ, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்காக மட்டுமல்ல; அ.தி.மு.க. வில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.