வட தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி தொடங்கிய கத்தரி வெயில், வரும் 29-ம் தேதி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்துச் சென்ற அம்பன் புயல் கரையை கடந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார். வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3.30 வரை வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தினார்.
மன்னார் வளைகுடா பகுதியில், மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும், அதே போல, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரள கடற்கரை பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story