ஊரடங்கால் ஏற்பட்ட சோதனை: ஓய்ந்து போன பழைய புத்தகங்கள் விற்பனை


ஊரடங்கால் ஏற்பட்ட சோதனை: ஓய்ந்து போன பழைய புத்தகங்கள் விற்பனை
x
தினத்தந்தி 23 May 2020 3:15 AM IST (Updated: 23 May 2020 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு காரணமாக பழைய புத்தகங்கள் விற்பனை ஓய்ந்து உள்ளது. இதனால் தண்ணீரில் மிதக்கும் காகிதமாகி விட்டோம் என கடைக்காரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 3-ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், 4-ம் கட்ட ஊரடங்கு கடந்த 18-ந்தேதி முதல் அமலாகி இருக்கிறது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் ஓரளவு கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் திரும்ப தொடங்கி இருக்கிறது. இடர்பாடான இச்சூழ்நிலையில் மக்கள் நடமாட்டம் இன்றி பாதித்த எத்தனையோ தொழில்களில் பழைய புத்தகங்கள் விற்பனை செய்யும் தொழிலும் அடங்கும்.

வசதியில்லாதோர் தொடங்கி நடுத்தர மக்கள் வரை பழைய புத்தகக் கடைகளை நாடாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். பாட புத்தகங்கள், தொழில் ரீதியான புத்தகங்கள், மனோதத்துவ புத்தகங்கள், நாவல்கள், சிறுகதைகள் என எல்லாவிதமான புத்தகங்களையும் வாங்க முடியாதவர்கள், பழைய புத்தக கடைகளுக்கு சென்று குறைந்த விலையில் புத்தகங்கள் வாங்கி படித்து மகிழ்வார்கள். அப்படி ஏழை-எளியோரின் சுமையை குறைத்து அவர்களை விரும்பிய புத்தகங்கள் வாங்க வழி செய்யும் கூடங்களாக பழைய புத்தகக் கடைகள் திகழ்கிறது என்றால் அது மிகையல்ல.

தற்போதைய சூழ்நிலையில் பழைய புத்தகக் கடைகள் திறந்திருந்தாலும் மக்கள் யாரும் வருவதில்லை. பழைய புத்தகக் கடைகளில் முறையாக கிருமிநாசினி தெளித்திருப்பார்களா? எத்தனை பேர் கை பட்டிருக்குமோ? என்ற அச்சத்தால் பழைய புத்தகக் கடைகளுக்கு யாருமே வருவது கிடையாது. இதனால் ஏழை, எளியோருக்கு விரும்பிய புத்தகங்கள் கிடைக்க வழிசெய்யும் கடைகள் இன்றைக்கு ஓய்ந்து போயிருக்கிறது.

இதனால் புத்தக விற்பனையை நம்பியிருக்கும் கடைக்காரர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. வெயிலிலும், மழையிலும் புத்தகங்களை பாதுகாப்பதே கடைக்காரர்களின் இப்போதைய ஒரே வேலையாக இருக்கிறது. ஊரடங்கில் நேர்ந்த சோதனையாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பழைய புத்தகக் கடைக்காரர்கள் வருத்தம் தோய்ந்த முகங்களுடனேயே காட்சி தருகிறார்கள். எப்போது இந்த நிலைமை மாறுமோ... எப்போது மீண்டும் பழையபடி வியாபாரம் நடக்குமோ... என்ற எதிர்பார்ப்புடன் நாட்களை நகர்த்தி கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சாலையோர பழைய புத்தகக் கடைக்காரர் ஜூலி தெரசா கூறியதாவது:-

எனது அப்பா காலம் தொட்டு கடந்த 68 வருடங்களாக பழைய புத்தகக் கடையை நடத்தி வருகிறோம். எனது தந்தையுடன், எனது அம்மாவும் கடையிலேயே தங்கி பணியாற்றி வந்தார். எனது பெற்றோர் மறைவுக்கு பிறகு பல வருடங்களாக இந்த கடையை நான் நடத்தி வருகிறேன். பழைய புத்தகங்கள் விற்பனைதான் எனது வாழ்வாதாரம். வீட்டு வாடகை கொடுப்பதில் இருந்து சாப்பிடுவது வரை எல்லாமே இந்த கடையை நம்பியே காலம் கடத்தி வருகிறேன்.

ஊரடங்கு காரணமாக 2 மாத காலத்துக்கும் மேலாக வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் நடமாட்டம் இல்லாததால் எங்கள் வாழ்க்கையும் நகராமல் இருக்கிறது. இதைவிட்டால் வேறு தொழிலும் எங்களுக்கு தெரியாது. இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் நாட்களை நகர்த்தி கொண்டிருக்கிறோம். எனது கடையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. ஊரடங்கு காரணமாக தண்ணீரிலும், கண்ணீரிலும் மிதக்கும் காகிதங்களாக எங்கள் வாழ்க்கை அமைந்துள்ளது. எங்களை போலவே ஏராளமான வியாபாரிகள் தவிப்படைந்து காணப்படுகிறார்கள். என்னவென்று சொல்வது?

இவ்வாறு அவர் கூறினார்

Next Story