கொரோனா தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை: தனியார் மையங்களில் குவியும் பொதுமக்கள்


கொரோனா தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை: தனியார் மையங்களில் குவியும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 24 May 2020 3:00 AM IST (Updated: 24 May 2020 2:16 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்வதற்காக பொதுமக்கள் தனியார் மையங்களில் குவிந்து வருகின்றனர்.

சென்னை,

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகின்றன. தமிழகத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகள் தவிர்த்து தனியார் ‘லேப்’களிலும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை அரசு சார்பில் தமிழகம் முழுவதும் 41 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதேநேரத்தில் 26 தனியார் கொரோனா பரிசோதனை மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளான ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நோயாளிகள் நிரம்பி வழிகின்றன. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இதனால், அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரும்பாலும் வசதி படைத்தவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் சென்று கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையை மேற்கொள்ள விரும்பாமல் தனியார் கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களை தேர்ந்து எடுத்து செல்கின்றனர்.

அதனால், சென்னையில் உள்ள தனியார் கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். அதாவது பிரபலமான தனியார் பரிசோதனை மையங்கள் பல்வேறு இடங்களில் பரிசோதனை மையங்களை வைத்து இருந்தாலும், அவற்றில் குறிப்பிட்ட ஒரு சில மையங்களை முற்றிலும் கொரோனா வைரஸ் பரிசோதனை மையங் களாக மாற்றி உள்ளனர்.

அதன்படி, சென்னை ஈ.வெ.ரா.பெரியார் சாலையில் அமைந்துள்ள தனியார் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ள வரிசையில் அமர்ந்து இருந்ததை பார்க்க முடிந்தது. இங்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கு ரூ.4,200 வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story