ஜி.எஸ்.டி. வரியை 50 சதவீதம் குறைக்க வேண்டும் மத்திய அரசுக்கு, சரத்குமார் வேண்டுகோள்


ஜி.எஸ்.டி. வரியை 50 சதவீதம் குறைக்க வேண்டும் மத்திய அரசுக்கு, சரத்குமார் வேண்டுகோள்
x
தினத்தந்தி 23 May 2020 9:39 PM GMT (Updated: 23 May 2020 9:39 PM GMT)

ஜி.எஸ்.டி. வரியை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, மே.24-

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தற்போதைய நடைமுறை பின்னடைவுகளையும், உடனடி பொருளாதார தேவைகளையும் மனதில்கொண்டு உற்பத்தியை பெருக்குவதற்கும், இடம்பெயர்ந்த பணியாளர்களை மீண்டும் பணி அமர்த்தவும், தயாரிப்பு சக்தியை அதிகரிக்கவும் சலுகைகள் உதவும்வகையில் அளிக்கப்படவேண்டும்.

ஏற்கனவே உள்ள விகிதாச்சாரத்தை பரிசீலிக்கின்றசூழலில், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உடனடியாக ஜி.எஸ்.டி. வரியை 50 சதவீதம் குறைப்பதன்மூலம் அனைவரும் ‘மேக் இன் இந்தியா’, ‘வோக்கல் பார் லோக்கல்’ என்ற அடிப்படையில் புத்துணர்ச்சியுடனும், ஊக்கத்துடனும் செயல்படுவார்கள் என்பதை மனதில்கொண்டு, ஜி.எஸ்.டி. வரியை 50 சதவீதமாக உடனடியாக குறைக்குமாறு மத்தியஅரசை கேட்டுக்கொள்கிறேன்.

ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டாலும் பொருளாதார மனஅழுத்தத்தை சமாளிப்பது எவருக்கும் எளிதான காரியம் அல்ல. எனவே, தற்சமயம் பொருளாதார பின்னடைவை 6 மாதங்களுக்கு சமாளிக்கும் வகையிலான பொருளாதார சீரமைப்பு திட்டங்களும், 30 கோடி குடும்பங்களின் வங்கிக்கணக்கில் ரூ.10 ஆயிரம் நேரிடையாக செலுத்தப்படுவதற்கான திட்டங்களே முதலில் செயல்படுத்த வேண்டும்.

அந்தவகையில், தற்போதைய நெருக்கடியை சமாளிப்பதற்கு ஆறுதலாக வங்கி கடன்களை திருப்பிசெலுத்த மேலும் 3 மாத அவகாசம் வழங்கியும், இன்னும் பிற சலுகைகளையும் அறிவித்திருக்கும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை வரவேற்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story