தமிழகத்துக்கு வரும் விமான பயணிகள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் என்ன? அரசாணை வெளியீடு
தமிழகத்துக்கு வரும், தமிழகத்தில் இருந்து செல்லும் விமான பயணிகள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்துக்கு வரும், தமிழகத்தில் இருந்து செல்லும் விமான பயணிகள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இன்று(திங்கட்கிழமை) முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் நிலையில், சென்னை விமான நிலையம் அதற்காக தயார் நிலையில் உள்ளது.
சமூக இடைவெளி கடை பிடிப்பதற்காக ஒருவருக்கு ஒருவர் 6 அடி இடைவெளி விட்டு நிற்கும் வகையில் கோடுகள் வரையபட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு சளி, இருமல், மூச்சுத் திணறல் போன்றவை இருக்கிறதா? என்பதை கேட்டறிவதுடன் தெர்மல் மீட்டர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னரே பயணிகள் தங்களின் பயணத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
மேலும், விமானத்தில் பயணம் செய்வதற்கான அனுமதி சீட்டை(போர்டிங்பாஸ்) முன்பு போன்று விமான நிலைய ஊழியர்கள் நேரடியாக கைகளில் வாங்கி பரிசோதனை செய்வதற்கு பதில் கண்ணாடி திரை ஒன்று அமைக்கப்பட்டு அதில் பயணிகள் அனுமதி சீட்டை காண்பிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு விமான சேவைகளை இயக்குவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை விமான போக்குவரத்து அமைச்சகம் பிறப்பித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் பிறப்பித்துள்ள வழிமுறைகளில், மாநில அரசுகள் தனிமைப்படுத்துதல் தொடர்பாக நெறிமுறைகளை உருவாக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கட்டாயமாக பின்பற்றும் வகையில் நிலையான இயக்க நடைமுறைகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
அதன்படி தமிழகத்துக்கு வரும் பயணிகள் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை:-
* கொரோனா தொற்று இருக்கிறதா என்று கண்டறியும் வகையில் உடல் வெப்ப பரிசோதனை செய்துக் கொள்ளவேண்டும்.
* அறிகுறி எதுவும் தென்படாத பயணிகள் 14 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் இருக்கவேண்டும். தமிழகத்தை சாராத பயணிகளாக இருந்தால், கட்டணம் செலுத்தி ஓட்டல்களில் தனிமைப்படுத்தும் வசதிக்கு பதிவு செய்யவேண்டும். ஏதாவது அறிகுறி தென்பட்டால் மாவட்ட கட்டுப்பாட்டு அழைப்பு மையத்துக்கோ (1077) அல்லது அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கோ தகவல் தெரிவிக்கவேண்டும். நோய்க்கான அறிகுறி கண்டறியப்பட்டால் தனிமைப்படுத்தப்பட்டு, அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுவார்கள்.
* உள்நாட்டு விமானங்கள் மூலமாக தமிழகத்துக்கு வரும் பயணிகள், தங்களுடைய விவரங்களை பதிவு செய்து இணையதள பாஸ் (இபாஸ்) கட்டாயமாக பெறவேண்டும். அதில், தான் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கவில்லை. காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசக்கோளாறு தனக்கு இல்லை. இந்த அறிகுறிகள் தென்பட்டால் சுகாதார அதிகாரிகளை உடனடியாக தொடர்புகொள்வேன் என்ற சில தகவல்களை அதில் தெரிவிக்கவேண்டும். இந்த தகவல்களை பூர்த்தி செய்யாதவர்கள், தமிழகத்துக்கு வர தகுதி இல்லாதவர்களாக கருதப்படுவார்கள்.
* விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்வதற்கு முன்பு, அனைத்து பயணிகளுக்கும் தனிமைப்படுத்தப்பட்ட முத்திரை அழியாத மையால் குத்தப்படும்.
* தமிழக அரசின் இணையதள பாஸ் இல்லாமல் விமான நிலையத்தில் இருந்து எந்த பயணிகளும் வெளியே செல்ல முடியாது.
தமிழகத்தில் இருந்து பிற இடங்களுக்கு செல்லும் பயணிகள் பின்பற்றவேண்டிய நடைமுறை:-
* விமான நிலைய அதிகாரியால் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னர், நோய் அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
* தமிழ்நாட்டிலிருந்து வெளி இடங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் அவர்களது வீடு அல்லது தங்குமிடத்தில் இருந்து விமான நிலையத்திற்கு செல்ல அங்கீகரிக்கப்பட்ட ஆவணமாக பயன்படுத்தப்படும்.
மேற்கண்ட தகவல் தலைமைச்செயலாளர் க.சண்முகம் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story