இஸ்லாமியர்கள் வாழ்க்கை தரம், நல்வாழ்வு மேலும் உயர வேண்டும் மு.க.ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து


இஸ்லாமியர்கள் வாழ்க்கை தரம், நல்வாழ்வு மேலும் உயர வேண்டும் மு.க.ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து
x
தினத்தந்தி 25 May 2020 4:30 AM IST (Updated: 25 May 2020 3:08 AM IST)
t-max-icont-min-icon

இஸ்லாமியர்களின் வாழ்க்கை தரம், நல்வாழ்வு மேலும் உயர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

சென்னை,

ரம்ஜான் பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

அன்பிற்கு இலக்கணமாக, இரக்கம் கருணையின் அடையாளமாக, ஈகைக் குணத்தின் வெளிப்பாடாகத் திகழும் இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள் அனைவருக்கும் தி.மு.க.வின் சார்பில் இதயபூர்வமான ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“கொரோனா“ பேரிடர் காலத்தில் “தனித்திருப்போம்“ என்ற மருத்துவ நெறிமுறைகளைக் கடைப்பிடித்து மிகுந்த நெருக்கடியிலும் தங்களை வருத்திக் கொண்டு நோன்பைக் கடைப்பிடித்துள்ள இஸ்லாமிய சமுதாய மக்களின் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும், தி.மு.க. என்றைக்கும் அயராது பாடுபட்டு வருகிறது என்பதை இஸ்லாமியர் அனைவரும் அறிவர். சமூக, பொருளாதார திட்டங்களையும், பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்து அவற்றைத் திறம்பட தி.மு.க. அரசு நிறைவேற்றியும் இருக்கிறது.

1969-ம் ஆண்டு மிலாதுநபிக்கு முதன்முதலில் அரசு விடுமுறை. உருது பேசும் முஸ்லிம்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது. இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமுதாய மக்கள் பயனடைய “சிறுபான்மையினர் நல ஆணையம்” தொடங்கியது. ஓய்வூதியம் பெற்று வந்த 2,000 உலமாக்களின் எண்ணிக்கையை 2,400 வரை உயர்த்தியது. முதன்முறையாக ‘வக்பு’ வாரியச் சொத்துகளைப் பராமரிப்பதற்கு என ரூ.40 லட்சம் மானியம் வழங்கியது என்று பல்வேறு சாதனைத் திட்டங்கள் அதில் அடங்கும்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், “உருது அகாடமி” தொடங்கியது, ‘காயிதே மில்லத் மணிமண்டபம்” அமைத்திட நிதி ஒதுக்கி, அடிக்கல்லும் நாட்டி கட்டி முடிக்கத் தொடர் நடவடிக்கை எடுத்தது என்ற சாதனைகளுக்கு இடையே இஸ்லாமியர்களுக்கு, பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீதத்தில் 3.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. சாதனைகளுக்கு எல்லாம் மணி மகுடமாகும்!


தி.மு.க.வுக்கும், இஸ்லாமிய சமுதாயத்தினருக்குமான நல்லுறவு அண்ணா, கருணாநிதி என நீடித்து நிலைத்து தற்போதும் அது தொடர்ந்து வருகிறது. இஸ்லாமியர்களுக்கு என்ன சோதனை எப்பக்கத்தில் இருந்து வந்தாலும், தப்பாமல் குரல் கொடுத்து உரிமை போற்றும் உண்மைப் பாதுகாவலனாக தி.மு.க. முன்னணியில் நின்று வருகிறது.

ஒப்பற்ற இந்தச் சமுதாயத்தின் வாழ்க்கைத் தரமும், நல்வாழ்வும் மேலும் உயர்ந்து, சிறப்பாக அமைந்திடவும், சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் நாளும் தழைத்திடவும், தி.மு.க.வின் சார்பில் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்து மகிழ்ச்சி கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story