தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; 5 மாவட்டங்களுக்கு அனல் காற்று எச்சரிக்கை


தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; 5 மாவட்டங்களுக்கு அனல் காற்று எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 May 2020 7:40 AM GMT (Updated: 25 May 2020 7:40 AM GMT)

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 4ந்தேதி கத்திரி வெயில் தொடங்கியது.  இதனை அடுத்து தொடர்ந்து அனல் வாட்டி வந்தது.  கடந்த சில நாட்களாக கடலூர், நாகை, சேலம், தஞ்சை, திருச்சி, திருத்தணி, தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட பல நகரங்களில் வெயில் 100 டிகிரியை (பாரன்ஹீட் அளவு) கடந்தது.  சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் சென்னை விமான நிலையம் ஆகிய பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வெப்பநிலை 100ஐ கடந்து பதிவானது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக, இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்து உள்ளது.

எனினும், மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு மற்றும் வேலூர் 5 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்.  5 மாவட்டங்களில் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும்.  அதனால், வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமென பொதுமக்களை கேட்டு கொண்டு உள்ளது.

Next Story