தமிழகத்தின் கடைசி மன்னர் சிங்கம்பட்டி ஜமீன் ராஜா காலமானார்


தமிழகத்தின் கடைசி மன்னர் சிங்கம்பட்டி ஜமீன் ராஜா காலமானார்
x
தினத்தந்தி 25 May 2020 11:02 AM GMT (Updated: 25 May 2020 11:02 AM GMT)

தமிழகத்தின் கடைசி மன்னர் சிங்கம்பட்டி ஜமீன் ராஜா காலமானார்

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் சுதந்திரத்திற்கு முன்பு சிங்கம்பட்டி ஜமீன் புகழ்பெற்று விளங்கிய சமஸ்தானமாக செயல்பட்டு வந்தது. இந்த சமஸ்தானத்தின் ராஜாவாக சுதந்திரத்திற்கு முன்பு தனது 3½ வயதில் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி ராஜாவாக பொறுப்பேற்றார்.

சுதந்திரத்திற்கு பிறகு 1952 ம் ஆண்டு ஜமீன் சமஸ்தானம் ஒழிக்கப்பட்டது. ஆனாலும் முருகதாஸ் தீர்த்தபதி தமிழகத்தின் கடைசி ராஜா என்ற மதிப்புடன் வசித்து வந்தார். ஆண்டுதோறும் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் விழாவின் போது இவர் ராஜா வேடமணிந்து காட்சியளிப்பார்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 320 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சிங்கம்பட்டி ஜமீன் தற்போது ஒரு கிராமமாக உள்ளது. அந்த காலத்தில் அரண்மனையாக இருந்த மாளிகையில் தற்போது அரசு உதவிபெறும் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இவருக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். சிங்கம்பட்டி ஜமீனில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்பட 8 கோவில்களுக்கு தற்போதும் பரம்பரை அறங்காவலராக செயல்பட்டு வந்தார். அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இப்போதும் அவரை ராஜா என்று பெருமிதத்துடனே அழைத்து வந்தனர்.

இந்தநிலையில் முதுமை காரணமாக கடைசி ராஜாவான முருகதாஸ் தீர்த்தபதி நேற்று இரவு 9.30 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 89. அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்களும், தலைவர்களும், பொது மக்களும் மரியாதை செலுத்தி வருகிறார்கள்.


Next Story