பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர் துணிக்கடை அதிபர் மனைவியுடன் பரிதாப சாவு - கொரோனா பாதிப்பா? போலீசார் விசாரணை


பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர் துணிக்கடை அதிபர் மனைவியுடன் பரிதாப சாவு - கொரோனா பாதிப்பா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 26 May 2020 5:15 AM IST (Updated: 26 May 2020 3:50 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சூளைமேட்டில் பூட்டிய வீட்டுக்குள் துணிக்கடை அதிபர் தனது மனைவியுடன் இறந்து கிடந்தார். கொரோனா பாதிப்பால் அவர்கள் இறந்தார்களா? அல்லது அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சென்னை, 

சென்னை சூளைமேடு, கில்நகர் மத்திய பள்ளி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் ஜீவன் (வயது 80). இவரது மனைவி தீபா (75). இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தனர். ஜீவன் சென்னை புரசைவாக்கத்தில் துணிக்கடை நடத்தி வந்தார். கொரோனா ஊரடங்கால் அவர் கடையை திறக்கவில்லை.வீட்டுக்குள்ளேயே அவர்கள் இருவரும் சிறை பட்டது போல வாழ்ந்து வந்தனர். ஜீவன் மும்பையை சேர்ந்தவர். தீபாவின் சொந்த ஊர் கொல்கத்தா ஆகும். இவர்களின் உறவினர்கள் மும்பையிலும், கொல்கத்தாவிலும் வாழ்வதாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டனர். இதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதாக தெரிகிறது. இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அதற்கு அவர்கள் மறுத்து விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று பகலில் அவர்கள் வசித்த வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் இது குறித்து சூளைமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

துணை கமிஷனர் தர்மராஜன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையில் போலீஸ் படையினரும், சுகாதார துறை அதிகாரிகளும் நேற்று மாலையில் துர்நாற்றம் வீசிய வீட்டு கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.

அங்கு ஜீவன் படுக்கை அறையில் தரையிலும், அவரது மனைவி தீபா கட்டிலிலும், பிணமாக கிடந்ததை பார்த்தார்கள். இருவரது பிணங்களும் அழுகிய நிலையில் காணப்பட்டன. உடலில் காயம் எதுவும் இல்லை.

கொரோனா பாதிப்பில் அவர்கள் இறந்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. கொரோனா தொற்று உள்ளதா என்பது பற்றி சோதனை நடத்தப்பட்டது. இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்கள் எவ்வாறு இறந்தனர் என்பது பற்றி உறுதியாக தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை என்றும் போலீசார் குறிப்பிட்டனர்.

Next Story