சென்னையில் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


சென்னையில் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Jun 2020 5:15 AM IST (Updated: 1 Jun 2020 4:27 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு 30-ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் தனியார் நிறுவனங்கள் இன்று முதல் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் சில பணிகளுக்கு மட்டும் 1-ந் தேதியில் (இன்று) இருந்து அனுமதி அளிக்கப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில் (ஐ.டி.) அந்த நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் சென்று 20 சதவீத பணியாளர்கள், அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

* அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. என்றாலும், முடிந்தவரை பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

* வணிக வளாகங்கள் (மால்கள்) தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளிக்கடை போன்றவை) 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில், குளிர் சாதன எந்திரங்களை இயக்கக்கூடாது.

* 8-ந் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுகிறது. அங்குள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. குளிர்சாதன எந்திரங்கள் இயக்கப்படக்கூடாது.

* டீ கடைகள், உணவு விடுதிகள் (7-ந் தேதிவரை பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

* 8-ந் தேதி முதல் டீ கடைகள், உணவு விடுதிகளில் மொத்த இருக்கையில் 50 சதவீதம் அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நோய் தொற்றை தடுக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. குறிப்பாக சென்னையில் 15 மண்டலங்களிலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, நோய் தொற்று உள்ளவர்களுடன் தொடர்புள்ளவர்களை கண்டறியும் பணி மண்டல அளவில் மேற்கொள்ளப்படுகிறது.

நோய்த் தடுப்பு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள ஏழைகளுக்கு முககவசம், வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர், சத்தான உணவு போன்றவை வழங்கப்படுகின்றன. அவர்களின் வாழ்விடம் நெருக்கமாக இருந்தால் அவர்கள் தனிமை முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

நோய் தொற்று ஏற்பட்டவர்கள் விபரம் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு, தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர, சென்னையில் உள்ள 149 நகர ஆரம்ப சுகாதார மையங்களிலும், 19 மருத்துவமனைகளிலும் காய்ச்சல் சோதனை மையம் செயல்படுவதுடன், 100-க்கும் மேற்பட்ட காய்ச்சல் சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, நோய் அறிகுறி உள்ளவர்கள் தீவிரமாக கண்டறியப்பட்டு, சோதனை செய்யப்படுகின்றனர்.

இதனால் நோய் தொற்று முன்கூட்டியே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால், உயிரிழப்பு தவிர்க்க வழி வகுக்கும். இதேபோன்ற நடவடிக்கைகள் காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story