அரசுப் பேருந்துகளில் பயணிகளிடம் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது - போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர்


அரசுப் பேருந்துகளில் பயணிகளிடம் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது -  போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர்
x
தினத்தந்தி 1 Jun 2020 2:34 PM IST (Updated: 1 Jun 2020 4:18 PM IST)
t-max-icont-min-icon

அரசுப் பேருந்துகளில் பயணிகளிடம் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் 4-வது கட்ட ஊரடங்கு நேற்று முடிவடைந்தது. 5-வது கட்ட ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும் மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

அதில் ஒன்றாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களை 6 மண்டலங்களாக பிரித்து மண்டலங்களுக்குள் மட்டும் பொதுபோக்குவரத்தை இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மண்டலத்துக்குள்ளும் அரசு பஸ்கள் 50 சதவீதம் இயக்கப்பட உள்ளது.

இந்தநிலையில், சென்னையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியதாவது:

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு நீங்கலாக பிற மாவட்டங்களில் இன்று 50% பேருந்துகளுடன் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. 60% பயணிகள் அதாவது ஒரு பேருந்தில் 32 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பயணிகள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளில் வைரஸ் தொற்று பரவா வண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படும். கன்னியாகுமரியில் காய்கறி சந்தையும், பேருந்து நிலையமும் ஒரே இடத்தில் இருப்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பயணிகள் குறைவாக இருப்பதால் தனியார் பேருந்துகள் இயக்கம் இல்லை. பயணிகள் வரத்தை பொறுத்து தனியார் பேருந்துகள் இயக்க விரைவில் முடிவு எடுக்கப்படும்.

அரசுப் பேருந்துகளில் பயணிகளிடம் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அரசுப் பேருந்துகளில் சோதனை முயற்சியாக பேடிஎம் மூலம் கட்டணம் வசூலிப்பது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பேருந்து பயணிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடிந்தவரை மின்னணு முறையை பயன்படுத்தலாம். பேருந்து நிலையத்தை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story