சென்னையில் 30ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு


சென்னையில் 30ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு
x
தினத்தந்தி 1 Jun 2020 10:03 PM IST (Updated: 1 Jun 2020 10:03 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 144 தடை உத்தரவை ஜூன் 30 வரை நீட்டித்துக் காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

ஜூன் 30-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் எனத் தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி இன்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைத் தவிரப் பிற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் இயங்கின. மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் திறக்க தடை தொடரும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்தநிலையில், சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பிறப்பித்துள்ள உத்தரவில்,

கொரோனா நோய் தொற்று பரவும் விதத்தை தடுக்கும் விதமாக, தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி சட்டப்பிரிவு (2) தொற்று நோய் சட்டம் மற்றும் ஒழுங்கு முறை 1897-ல் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நடைமுறைப் படுத்தும் வகையில் 144 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடுவதை தடை செய்யும் ஆணை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவை மீறுபவர்கள், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுநலன் மற்றும் பொது அமைதியை நிலை நாட்டும் வகையில் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story