தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு


தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Jun 2020 5:00 AM IST (Updated: 2 Jun 2020 4:07 AM IST)
t-max-icont-min-icon

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதா? என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரிடம் ‘தினத்தந்தி’ நிருபர் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அரசு சார்பில் 43 கொரோனா பரிசோதனை கூடங்களும், தனியார் மருத்துவமனைகள் சார்பில் 29 பரிசோதனை கூடங்களும் உள்ளன. அரசு பரிசோதனை கூடங்களில் கட்டணம் கிடையாது. தனியார் பரிசோதனை கூடங்களில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிர்ணயித்த கட்டணமான ரூ.4 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தது. இதையடுத்து முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில், தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் உடன் பேசினேன். அப்போது கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் அதனை ஏற்றுக்கொண்டார்கள். எனவே தனியார் பரிசோதனை கூடங்களில் இனி ரூ.3 ஆயிரம் மட்டுமே கொரோனா பரிசோதனைக்காக வசூலிக்கப்படும். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 கழித்துக்கொள்ளப்படும். அந்த தொகை அரசால் வழங்கப்பட்டுவிடும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களுக்குள் வெளியாகும். இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், 400 படுக்கைகள் கொண்ட புதிய கொரோனா ‘வார்டு’ தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த ‘வார்டை’ சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியும், வருவாய் நிர்வாக கமிஷனருமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story