சிறப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் கலந்துகொள்வதற்காக 49 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு - தமிழக அரசு


சிறப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் கலந்துகொள்வதற்காக 49 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு - தமிழக அரசு
x
தினத்தந்தி 2 Jun 2020 9:27 AM GMT (Updated: 2 Jun 2020 10:51 AM GMT)

சிறப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் கலந்துகொள்வதற்காக 49 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

உலகம் முழுவதும் தற்பொழுது மக்களை அச்சுறுத்தி வரும் கொரனா வைரஸ் தொற்று நோயிலிருந்து காப்பதற்கும் அதன் பரவலை தடுக்கும் வகையில் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக தடை உத்தரவு கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை ஐந்து முறை நீடிப்பு செய்து பல்வேறு நிறுவனங்கள் குறிப்பாக கல்வி நிறுவனங்களை மூடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்காலங்களில் பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பட்ட மக்களும் முகக்கவசம் அணியதும் அவ்வப்போது சோப்பு மற்றும் கிருமி நாசினிகள் பயன்படுத்தி கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், வசிக்கும் இருப்பிடம், வேலை செய்யும் அலுவலகங்கள், பள்ளிகள், நிறுவனங்கள் உட்பட அனைத்து இடங்களையும் கிருமிநாசினி உபயோகம் செய்து தூய்மையாக வைத்துக் கொள்ள அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தற்போது சிறப்புப்பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஜூன் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களும், சிறப்பு ஆசிரியர்களும், இத்தேர்வில் கலந்துக்கொள்ள அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிறப்புப்பள்ளி மாணவர்கள் தேர்வு நடக்க இருக்கும் காலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே விடுதியில் தங்கி பயன்பெறும் சுமார் 800 மாணவர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திலிருந்து தாங்கள் கல்வி பயிலும் பள்ளிகளுக்கு வருவதற்கு போக்குவரத்துறை மூலம் 49 சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 72 கல்வி நிறுவன மாணவர்கள் பயன்பெறுவர்.

10- வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் ஏற்கனவே தங்கள் இருப்பிடம் அலைபேசி எண் விவரங்களை தங்கள் பள்ளி நிறுவனத்தின் மூலம் இத்துறைக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து அனைவருக்கும் தங்கள் மாவட்டத்திலிருந்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்று திரும்பும் வகையில் சிறப்பு பேருந்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரும் உடன் பயணம் செய்யலாம். இப்பேருத்தின் மூலம் மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனம் அமைந்துள்ள மாவட்டங்களுக்கு 08.06.2020 திங்கள் அன்று காலை 08.00 மணிக்கு பயணம் தொடங்கி, அன்று மாலையில் வெளிமாவட்டங்களுக்கு அவர்கள் கல்வி பயிலும் நிறுவனங்களின் விடுதிகளுக்கு சென்றடைவர். மீண்டும் தேர்வு முடிந்த உடன் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு 26.06.2020 அன்று காலை 08.00 மணிக்கு புறப்பட்டு திரும்ப வந்து அடைவதற்கும் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பேருந்துகள் புறப்படும் மற்றும் அடையும் இடங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகும். எனவே பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து மாணவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு இருப்பிடத்திலிருந்து அழைத்து வரவும், மீண்டும் கொண்டு செல்லவும் உரிய ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். இந்த சிறப்புப் பேருந்துகளின் வருகை நேரம், புறப்படும் நேரம் ஆகியவை அனைவருக்கும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் தெரியப்படுத்தப்படும். உள்ளூர் மாணவர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் கல்வி நிறுவனங்களுக்கு வந்து செல்ல வேண்டும். மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர்கள் மற்றும் கல்வி நிறுவனத்தின் தலைமையாசிரியர்கள் கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து இதர மாவட்டங்களிலிருந்து வரும் மாணவர்கள் மற்றும் இதர மாவட்டத்திற்கு செல்லும் மாணவர்கள் உடல்நிலை பரிசோதனை செய்து பாதுகாப்பாக அவர்களின் சேருமிடத்திற்கு பயணம் மேற்கொள்ள உரிய ஏற்பாட்டினை செய்ய வேண்டும்.

சிறப்பு பேருந்தில் பயணம் தொடங்கு முன்பு, அனைத்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள், பாதுகாவலர்களின் உடல்நிலையினை பரிசோதித்து நோய் தொற்று இல்லாமையை உறுதி செய்து கொள்ள வேண்டும். பயணம் மேற்கொள்ளும் பேருந்து இருக்கையில் அறிவுறுத்தப்பட்ட சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும். பேருந்து பயணம் செய்யும் அனைவரின் நலன் கருதி பேருந்து புறப்படுவதற்கு முன்பு (ஒரு மணி நேரம் முன் கூட்டியே) குறிப்பிட்ட இடத்தில் தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story