மாநில செய்திகள்

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + DMK MLA JAnbazhagan Corona infection confirmed

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில்,1,286 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 11 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும் 208 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும்,  சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களைத் தொடர்ந்து வழங்கி வந்தார். இதனையடுத்து, ஜூன் 3-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகளுக்காக மாவட்ட நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார்.

இதனிடையே, கடந்த 2 நாட்களாவே அவர் தன்னைத்தானே தனிமை படுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரத்த அழுத்தம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் அவருக்கு இருப்பதால் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என நெருங்கிய மருத்துவர்கள் ஆலோசனை கூறினர். இதனையடுத்து, நேற்று இரவு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத் திணறலோடு ஜெ.அன்பழகன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்துப் பார்த்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் முதன்முறையாக எம்.எல்.ஏ., ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.