அரசுக்கு எதிரான போராட்டங்களில் கைதானதை மறைத்து வேலையில் சேர்ந்த பெண் போலீஸ் நீக்கம்


அரசுக்கு எதிரான போராட்டங்களில் கைதானதை மறைத்து வேலையில் சேர்ந்த பெண் போலீஸ் நீக்கம்
x
தினத்தந்தி 5 Jun 2020 3:30 AM IST (Updated: 5 Jun 2020 3:24 AM IST)
t-max-icont-min-icon

அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று கைதான விவரத்தை மறைத்து பணியில் சேர்ந்ததால், பயிற்சி பெண் போலீசை பணி நீக்கம் செய்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தேனி,

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி பிரேமா (வயது 28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய போலீஸ் பணிக்கான தேர்வில் பிரேமா பங்கேற்றார்.

எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை அனைத்திலும் தேர்ச்சி பெற்றார். கடந்த ஏப்ரல் மாதம் அவர் போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். பணியில் சேர்ந்த அவர் ஒரு மாத காலம் தேனி காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றார். பின்னர், திருச்சி காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில், பிரேமா அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று கைதான விவரங்களை மறைத்து போலீஸ் பணியில் சேர்ந்துள்ளதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். ராயப்பன்பட்டி போலீஸ் நிலையம் உள்பட மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் உள்ள வழக்குகள் விவரங்களில் பயிற்சி போலீஸ் பிரேமா குறித்த விவரங்களை தேடினர். ஆனால், அதில் விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாராயணத்தேவன்பட்டி பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்திய ஒரு போராட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோவை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், பிரேமா பங்கேற்ற விவரம் தெரியவந்தது. அரசுக்கு எதிராக நடந்த அந்த போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை ஆய்வு செய்த போது, அதில், பிரேமா, கலைமணி என்ற பெயரில் கைதாகி இருப்பது தெரியவந்தது.

அரசுக்கு எதிராக நடந்த 3 போராட்டங்களில் அவர் பங்கேற்று கைதாகி இருப்பதும், அதில் அவர் தனது உண்மையான பெயரை சொல்லாமல் வேறு பெயரில் கைதாகி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வியும் விசாரணை நடத்தினார். விசாரணையில், பிரேமா போலீஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் போது வழக்குகள் குறித்த உண்மையை மறைத்து தேர்வு விதிகளை மீறி பங்கேற்றது தெரியவந்தது. இதுகுறித்து தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. திரிபாதிக்கு, சூப்பிரண்டு விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார். இதையடுத்து பிரேமாவை போலீஸ் பணியில் இருந்து நீக்கம் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டார். அதன்படி அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

Next Story