கொரோனா படுக்கை வசதி குறித்து தவறான தகவல் அளித்தால் கடும் நடவடிக்கை; அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
கொரோனா படுக்கை வசதி குறித்து தவறான தகவல் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,515 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 13 பேரும், தனியார் மருத்துவமனையில் 5 பேரும் என 18 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரையில் 269 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 212 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அவருடன் அமைச்சர்கள், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர். அவர் கூறும்பொழுது, கொரோனா சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என கூறுவதில் உண்மை இல்லை என கூறினார்.
கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கான படுக்கை வசதி தட்டுப்பாடு இல்லை என்று கூறிய அமைச்சர், நடிகர் வரதராஜனின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். கொரோனா படுக்கை வசதி குறித்து தவறான தகவல் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
கண்ணுக்கு தெரியாத வைரசை எதிர்த்து போராடும் நிலையில் விமர்சனங்கள் வேண்டாம். 6 பேர் இன்று வெண்டிலேட்டரில் உள்ளனர். கொரோனா தடுப்பில் கடும் நெருக்கடியுடன் அரசு செயல்படும் சூழலில் வதந்தி பரப்ப கூடாது. கொரோனா தடுப்பில் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர். ஆதாரம் இல்லாத எந்த தகவலையும் பரப்ப வேண்டாம் என அவர் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story