10ம் வகுப்பு பொது தேர்வை கைவிட வேண்டும்; அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் 10ம் வகுப்பு பொது தேர்வை கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் ஜூன் 1ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொது தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, ஜூன் 15ந்தேதி முதல் 25ந்தேதி வரை நடத்தப்படும் என்று தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் கூறினார். இதற்கான ஹால்டிக்கெட் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தி வரும் சூழலில் தேர்வை நடத்துவதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் 10ம் வகுப்பு பொது தேர்வை கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து விட்டதாகவும், கோவிட் 19 வைரஸ், அதிக வீரியம் கொண்ட க்ளேட் ஏ13 ஐ ஆக உருமாறி பரவி வருவதாக வெளியான தகவல் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்த சூழலில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வை நடத்தியே தீருவது என்ற அரசின் முடிவு அபாயகரமானது. இந்த முடிவால் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பெற்றோர், கல்வியாளர்கள் உட்பட பலரும் அச்சத்தில் உள்ளனர்.
எனவே மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என்பதால் தமிழக அரசு 10ம் வகுப்பு பொது தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி, எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்கிற நம்பிக்கையான, பாதுகாப்பான நிலை உருவான பிறகு தேர்வை நடத்தி கொள்ளலாம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
Related Tags :
Next Story