ஆவணங்கள், டோக்கன் காட்டினால் போதும் மாவட்டம் கடந்து சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் - கலெக்டர்களுக்கு அரசு கடிதம்


ஆவணங்கள், டோக்கன் காட்டினால் போதும் மாவட்டம் கடந்து சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் - கலெக்டர்களுக்கு அரசு கடிதம்
x
தினத்தந்தி 9 Jun 2020 3:19 AM IST (Updated: 9 Jun 2020 3:19 AM IST)
t-max-icont-min-icon

ஆவண பதிவுக்காக சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு மாவட்டம் கடந்து செல்பவர்கள், பதிவுக்கான டோக்கன், ஆவணங்களை காட்டினால் அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

சென்னை,

 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் சில நிபந்தனைகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆவண பதிவுக்காக மாநிலத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகமும் அனைத்து ஊழியர்களுடனும் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆவணப்பதிவுக்காக சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு மக்கள் வந்து செல்வதில் உள்ள இடையூறுகள் பற்றி அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. எனவே ஆவண பதிவுக்கான டோக்கனை பாசாக பயன்படுத்தி சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு வர தகுந்த உத்தரவை அரசு பிறப்பிக்கும்படி தலைமை பதிவாளர் கேட்டுக்கொண்டார்.

ஆவண பதிவுக்காக மக்கள் மாவட்டம் விட்டு மாவட்டங்கள் போக வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இந்த கோரிக்கை சரியானது தான். ஆனால் ஆவண பதிவுக்காக ‘இ-பாஸ்’ வழங்கப்படுவதில்லை. எனவே ஒரு மாவட்டத்தில் இருந்து ஆவண பதிவுக்காக மற்ற மாவட்டத்துக்கு செல்லும்போது, பதிவுத்துறை வழங்கி இருக்கும் டோக்கன் மற்றும் பதிவு செய்யப்பட வேண்டிய ஆவணங்களை பயணத்தின்போது மக்கள் கையில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே ஆவண பதிவுக்காக பெறப்பட்ட டோக்கன் மற்றும் பதிவு செய்யப்பட வேண்டிய ஆவணங்களை, சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு வரும்போது மக்கள் காட்டினால், அதை ஏற்றுக்கொண்டு அவர்கள் பயணத்தை அனுமதிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story