ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தடை கேட்ட வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு


ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தடை கேட்ட வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 Jun 2020 4:50 AM IST (Updated: 9 Jun 2020 4:50 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தடை கேட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ்கார்டன் வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு தடைக்கேட்டு சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் போயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு பகுதி வாங்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

அதனால், தற்போது அந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது என்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் ஆகும். மேலும், அந்த வீட்டை சோதனையிட்ட வருமான வரித்துறையினர், அதில் ஒரு பகுதியை சீல் வைத்துள்ளனர். சோதனையின் அடிப்படையில் வருமான வரித்துறை இதுவரை எந்த இறுதி உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் விசாரணை முடிவுக்கு வரவில்லை.

பல விசாரணைகளில் சம்பந்தப்பட்டுள்ள அந்த வீட்டை, அரசு செலவில் நினைவு இல்லமாக மாற்ற முடியாது. இந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற போயஸ்கார்டனை சேர்ந்த 108 பேர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்க கோரும் இந்த வழக்கை எப்படி விசாரணைக்கு ஏற்க முடியும்? இந்த வழக்கு முறையாக தாக்கல் செய்யப்பட வில்லை‘ என்று கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து, வழக்கை திரும்ப பெற டிராபிக் ராமசாமி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்ற கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதியளித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story