தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி- முதல்வர் பழனிசாமி


தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி- முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 9 Jun 2020 1:19 PM IST (Updated: 9 Jun 2020 1:19 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

சென்னை

காணொலி மூலமாக ஊடகங்களிடம் பேசிய முதல்-அமைச்சசர்  எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

ஜூன் 15 முதல் ஜூன் 25-ம் தேதி வரை 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்தது. சென்னை ஐகோர்ட்டில் இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது. அப்போது கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் தேர்வைத் தள்ளிவைப்பது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டுமென நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் தொற்று குறைய வாய்ப்பில்லை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தேர்வு குறித்து அரசு ஆலோசித்தது. அதன்படி, பெற்றோர்களின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, மாணவர்களின் நலனை காக்க 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, 12-ம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் கணக்கிடப்படும்.

12-ம் வகுப்பில் ஏற்கெனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படவிருந்த மறுதேர்வும் ஒத்திவைக்கப்படுகிறது. மறுதேர்வுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.


Next Story