கொரோனா ஊரடங்கை மீறி மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வு நடத்திய பள்ளிக்கு ‘சீல்’ முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை


கொரோனா ஊரடங்கை மீறி மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வு நடத்திய பள்ளிக்கு ‘சீல்’ முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை
x
தினத்தந்தி 10 Jun 2020 3:00 AM IST (Updated: 10 Jun 2020 1:08 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கை மீறி 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்திய பள்ளிக்கு ‘சீல்’ வைத்து முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்து உள்ளார்.

கோவை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு எந்தவித முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் கொரோனா ஊரடங்கை மீறி கோவை டவுன்ஹாலில் உள்ள சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை சில மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அவர்களை 6-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் அழைத்திருந்ததாக கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு ஒருவர் புகார் மனு அளித்தார். அதன்பேரில் கலெக்டர் ராஜாமணி சம்பந்தப்பட்ட அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷா மற்றும் தெற்கு வட்டாட்சியர் அருள்முருகன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து கோவை தெற்கு வட்டாட்சியர் அருள்முருகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷா, மாநகர மாவட்ட கல்வி அதிகாரி ராஜலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் அந்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பள்ளி நிர்வாகம் தரப்பில் அவ்வாறு நுழைவுத்தேர்வு நடத்தப்படவில்லை என்று சொல்லப்பட்டதாக தெரிகிறது. ஆனால் புகார் அளித்தவர் உரிய போட்டோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்து இருந்ததார். பின்னர் நடத்திய விசாரணையில் அந்த பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் தெற்கு வட்டாட்சியர் உத்தரவின்பேரில் சி.எஸ்.ஐ. பள்ளியை மூடி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நிருபர்களிடம் கூறுகையில், மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தியது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுகுறித்து கலெக்டருக்கு அறிக்கை அளிக்கப்பட்டு கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story