12-ந்தேதி முதல் செங்கல்பட்டு-திருச்சி இடையே சிறப்பு ரெயில் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


12-ந்தேதி முதல் செங்கல்பட்டு-திருச்சி இடையே சிறப்பு ரெயில் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Jun 2020 11:00 PM GMT (Updated: 9 Jun 2020 10:22 PM GMT)

தமிழகத்தில் 12-ந்தேதி முதல் செங்கல்பட்டு-திருச்சி, கோவை-அரக்கோணம் இடையே சிறப்பு ரெயில் சேவை தொடங்குகிறது.

சென்னை,

தமிழகத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் மதுரை-விழுப்புரம், காட்பாடி-கோவை, நாகர்கோவில்-திருச்சி, மயிலாடுத்துறை- கோவை ஆகிய ஊர்களுக்கு இருமார்க்கங்களிலும் சிறப்பு ரெயில் சேவை தொடங்கியது. இந்தநிலையில் வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் கூடுதல் சிறப்பு ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* திருச்சி-செங்கல்பட்டு (வண்டி எண்: 02606) இடையே அதிவிரைவு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் வருகிற 12-ந்தேதி (நாளை மறுதினம்) முதல் தினசரி காலை 7 மணிக்கு திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு அரியலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக செங்கல்பட்டை வந்தடையும். மறுமார்க்கத்தில் (02605) 12-ந்தேதி முதல் மாலை 4.45 மணிக்கு செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மேல்மருவத்தூர், விழுப்புரம், அரியலூர் வழியாக திருச்சியை சென்றடையும்.

* அரக்கோணம்-கோவை (02675) இடையே அதிவிரைவு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் வருகிற 12-ந்தேதி முதல் தினசரி காலை 7 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவையை சென்றடையும். மறுமார்க்கத்தில் (02676) 12-ந்தேதி முதல் மதியம் 3.15 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

* திருச்சி-செங்கல்பட்டு(06796) இடையே அதிவிரைவு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் வருகிற 12-ந்தேதி முதல் தினசரி காலை 6.30 மணிக்கு திருச்சி ரெயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக செங்கல்பட்டுக்கு வந்து சேரும். மறுமார்க்கத்தில் (06795) 12-ந்தேதி முதல் மதியம் 2 மணிக்கு செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மேல்மருவத்தூர், விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சியை சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story