சிறந்த உட்கட்டமைப்பு மாநிலமாக தமிழகத்தை மாற்றிய உள்ளாட்சித்துறை அமைச்சரை களங்கப்படுத்த முடியாது-அமைச்சர் செல்லூர் ராஜூ அறிக்கை


சிறந்த உட்கட்டமைப்பு மாநிலமாக தமிழகத்தை மாற்றிய உள்ளாட்சித்துறை அமைச்சரை களங்கப்படுத்த முடியாது-அமைச்சர் செல்லூர் ராஜூ அறிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2020 11:15 PM GMT (Updated: 2020-06-10T03:57:43+05:30)

தமிழகத்தை தலைசிறந்த உட்கட்டமைப்பு மாநிலமாக மாற்றிய உள்ளாட்சித்துறை அமைச்சரை கே.என்.நேரு போன்றவர்களால் களங்கப்படுத்த முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க.வின் ஒன்றிணைவோம் வா திட்டம் குறித்து தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.வி.வேலுமணி விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டார். மேலும், அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் மீதும் குறைகூறி இருந்தார். இதைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் பற்றி குறைகூற அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது என தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு பதில் அளித்தார்.

இந்தநிலையில் கே.என்.நேரு வெளியிட்ட அறிக்கைக்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

இரவு, பகல் பாராமல் பணியாற்றி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால், கொரோனாவில் இருந்து குணமாவோர் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பரிசோதனை நடத்துவதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தற்போதுள்ள இக்கட்டான தருணத்தில் அரசுக்கு துணைநின்று ஆக்கம் காட்டாமல், அவதூறு அறிக்கைகள் விடுத்து அற்ப அரசியல் நடத்துவது மனித நேயமற்ற செயல்கள் அருவருப்பின் உச்சமாகிவிட்டது.

முன்னாள் அமைச்சர் நேரு, எடப்பாடி பழனிசாமியை வசைபாடுகிறார். அமைச்சர் வேலுமணியை பற்றி தரம்தாழ்ந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அண்ணா கண்ட இயக்கத்தை, அவர் வழியில் நடத்துவதற்கு முடியாமல் வடநாட்டில் இருந்து வாடகைக்கு ஆள்பிடித்து வந்து கட்சி நடத்துகிறவர்கள், எங்களை சிறைக்குச் செல்ல நேரிடும் என்று மிரட்டுகிறார்.

மு.க.ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும் தான் எதிர்காலத்தில் சிறை செல்ல காத்திருக்கிறார்கள். நேரு மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பும் நிச்சயம் வெளிவந்து விடும். கண்ணீர் விட்டுக் கதறி அழுத குடும்ப சாபங்கள் நேருவை சிறைக்கு அனுப்பும் என்பது நிச்சயம்.

பாவங்களை எல்லாம் போக்கிட வேண்டுமானால், மு.க.ஸ்டாலின் தனது சொந்த பணத்தில் இருந்து பொதுமக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் என நிவாரண நிதி கொடுக்கட்டும். தி.மு.க.வின் அரசியல் பிழைப்புக்கான எல்லா கதவுகளும் சாமானிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளால் மூடப்பட்டு விட்டன.

ஒரே இயக்கத்தில், 40 வருடங்கள் விசுவாசத்தோடு உழைத்து, கிளைக்கழக செயலாளரில் தொடங்கி முதல்-அமைச்சராக உயர்ந்து இருக்கும் எடப்பாடி பழனிசாமி, 1 1/2 கோடி தொண்டர்களை கொண்ட ஒப்பில்லா இயக்கத்தின் இரண்டாம் இதயக்கனி. அவரது வழியில், 123 தேசிய விருதுகளை உள்ளாட்சித் துறை பெற்று இந்தியாவின் தலைசிறந்த உட்கட்டமைப்பு கொண்ட மாநிலம் தமிழகம் எனும் பெருமையை தமிழ் மண்ணுக்கு கொண்டு வந்து சேர்த்த உள்ளாட்சித்துறை அமைச்சரை நேரு போன்றவர்கள் தங்களது அறிக்கையால் களங்கப்படுத்த முடியாது.

எதுவரினும், எவர்வரினும் நேருக்கு நேர் நின்று வென்று காட்டும் எங்களுக்கு நேரு ஒரு பொருட்டல்ல. தங்கள் இருப்பையும், தங்கள் அரசியல் வெறுப்பையும் வெளிக்காட்ட தலைமை செயலாளரிடம் தகராறு, மாவட்ட கலெக்டர்களோடு மல்லுக்கட்டு, ஆண்டான் அடிமைக் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வழக்கொழிந்து போன வார்த்தைகளை பயன்படுத்தி பட்டியலின மக்களை புண்டுத்தியது போன்ற செயல்களில் ஈடுபட்டு முன்ஜாமீன் கேட்டு அலைகின்ற திராவிட முன்ஜாமீன் கழகமாக தி.மு.க. திகழ்கிறது.

பொது வாழ்வில் ஏவப்படுகிற அவதூறுகளை நெஞ்சு நிமிர்த்தி எதிர்கொள்ள கற்றவர்கள் நாங்கள். இதனை பீகார் டியூசன் வாத்தியாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story