தமிழகத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 2 முககவசம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13½ கோடி முககவசம் வினியோகம்


தமிழகத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 2 முககவசம்  ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13½ கோடி முககவசம் வினியோகம்
x
தினத்தந்தி 10 Jun 2020 11:48 PM GMT (Updated: 2020-06-11T05:18:22+05:30)

ஒவ்வொருவருக்கும் தலா 2 முககவசம் வீதம், ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க 13 1/2 கோடி முககவசங்களை கொள்முதல் செய்வதற்காக விலை நிர்ணயக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா தொற்றை தவிர்ப்பதற்கு தமிழக அரசு அவ்வப்போது உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் விலையில்லாத துணியிலான முககவசங்களை வாங்கி வழங்குவதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

தமிழகத்தில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 குடும்ப உறுப்பினர்களை கொண்ட 2 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரத்து 76 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதை கணக்கிடும்போது, தலா ஒருவருக்கு 2 தரமான மறுபடியும் உபயோகிக்கத்தக்கதான 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 துணி முககவசங்கள் வாங்கப்பட வேண்டும்.

அவசர கொள்முதல்

அவசர காலத்தில் பாதுகாப்பு உபகரணமாக இதை கொள்முதல் செய்யப்பட வேண்டி உள்ளது. எனவே அவசர கொள்முதலை மேற்கொள்ளலாம். இந்த கொள்முதலுக்கான விலைப்புள்ளியை மதிப்பிடுவதற்காக விலை நிர்ணயக் குழுவை அமைக்க வேண்டும் என்று அரசை வருவாய் நிர்வாக ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தை பெறுவதில் வெற்றி பெறும் ஏலதாரருக்கு அதற்கான ஒப்பந்தத்தை அரசு வழங்கலாம் என்று கூறியுள்ளார்.

குழு அமைப்பு

அவரது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு விலை நிர்ணயக் குழுவை அமைத்து அரசு உத்தரவிடுகிறது. இந்தக் குழுவின் தலைவராக வருவாய் நிர்வாக ஆணையர் செயல்படுவார். இயற்கை பேரிடர் மேலாண்மை இயக்குனர், பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனர் உள்பட 6 பேர் அந்தக் குழுவில் இடம் பெறுவார்கள்.

மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய முகக்கவசத்தின் தரம் மற்றும் வகை பற்றி இந்த குழு முடிவு செய்யும். இதற்கான விலையை திருப்திகரமாக இந்தக் குழு நிர்ணயிக்க வேண்டும். ஒப்பந்த விலை மற்றும் ஏலத்தில் வெற்றி பெற்றவரை முடிவு செய்து அரசுக்கு தகுந்த பரிந்துரையை இந்தக் குழு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story