ஜெ.அன்பழகன் மறைவுக்கு அஞ்சலி தியாகராயநகரில் கடைகள் அடைப்பு
ஜெ.அன்பழகன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தியாகராயநகர், பாண்டிபஜார் பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
சென்னை,
கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஜெ.அன்பழகன் நேற்று காலையில் மரணம் அடைந்தார். இந்த தகவல் சென்னை தியாகராயநகர் மற்றும் பாண்டிபஜார் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் மத்தியில் வேகமாக பரவியது.
இதையடுத்து ஜெ.அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடைகளை அடைத்தனர். பூட்டப்பட்டிருந்த கடைகளில், ‘ஜெ.அன்பழகனுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளது‘ என்ற வாசகம் ஒட்டப்பட்டிருந்தது. ரங்கநாதன் தெருவின் முகப்பில், ரங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்கம் சார்பில் ஜெ.அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பேனர் தொங்க விடப்பட்டிருந்தது.
கடைகள் அடைப்பு
உஸ்மான் சாலை, முத்துரங்கசாலை, ரங்கநாதன் தெரு, நடேசன் தெரு உள்ளிட்ட தியாகராயநகரின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த துணிக்கடைகள், நகைக்கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், வாட்ச் கடைகள், ஓட்டல்கள், பழக்கடை உள்ளிட்ட பல்வேறு வகையான கடைகள் பூட்டியிருந்தது.
கடைகள் பூட்டப்பட்டிருப்பது தெரியாமல் துணிமணிகள், நகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள், எதுவும் வாங்காமல் திரும்பிச் சென்றார்கள்.
அஞ்சலி
மறைந்த ஜெ.அன்பழகனின் அலுவலகம் தியாகராயநகர் மேட்லி தெருவில் உள்ளது. அந்த அலுவலகத்தின் வெளியே அலங்கரித்த ஜெ.அன்பழகனின் புகைப்படத்தை வைத்து அவருடைய ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர். இதேபோல மகாலட்சுமி தெருவில் உள்ள ஜெ.அன்பழகனின் வீட்டுக்கு யாரும் செல்லாத வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனை கண்காணிப்பதற்கு ஏராளமானோ போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த தி.மு.க.வினர் ஜெ.அன்பழகன் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
ஜெ.அன்பழகன் மறைவையொட்டி தி.மு.க. கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது இருந்தது.
Related Tags :
Next Story