முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு


முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Jun 2020 8:45 PM IST (Updated: 15 Jun 2020 8:45 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மருத்துவ வல்லுனர் குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் வரும் 19-ந் தேதி அதிகாலை 12 மணி முதல் 30-ந் தேதி இரவு 12 மணி வரை பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் பணிகள், ஊடகம் சார்ந்த பணிகள் மற்றும் அரசு சார்ந்த சில பணிகளுக்கு மட்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாட்களில் வரும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் வரும் 19-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை திறக்கப்படாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Next Story