பெண்ணின் உடலில் 30 மணிநேரம் சிக்கி இருந்த கத்தி அகற்றம்


பெண்ணின் உடலில் 30 மணிநேரம் சிக்கி இருந்த கத்தி அகற்றம்
x
தினத்தந்தி 15 Jun 2020 8:30 PM GMT (Updated: 15 Jun 2020 6:55 PM GMT)

கத்தியால் குத்தப்பட்ட பெண்ணின் உடலில் 30 மணி நேரம் சிக்கி இருந்த கத்தியை அகற்றி கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்தனர்.

கோவை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கொட்ட ராஜா நகரை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மனைவி மல்லிகா (வயது 40). கடந்த மாதம் 25-ந் தேதி குடும்ப பிரச்சினை காரணமாக மல்லிகாவை ஒருவர் கத்தியால் குத்தி உள்ளார். 7 அங்குலம் கொண்ட அந்த கத்தி அவருடைய நெஞ்சு பகுதியில் பாய்ந்தது. இதனால் மல்லிகா அலறியதும், அந்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அந்த கத்தி மல்லிகா நெஞ்சு பகுதியில் ஆழமாக இறங்கி இருப்பது தெரியவந்தது. உடனே அவர் மேல் சிகிச்சைக்காக கடந்த 26-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

6 அங்குலம் இறங்கியது

அங்கு இதய அறுவை சிகிச்சைத்துறை பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அப்போது அவருடைய நெஞ்சு பகுதியில் 6 அங்குல அளவுக்கு கத்தி உள்ளே இறங்கி இருப்பதும், ஒரு அங்குல கைப்பிடி மட்டும் வெளியே இருப்பதும் தெரிந்தது. ஆனால் அந்த கத்தியானது நுரையீரல் தவிர மற்ற உறுப்புகளை பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த கத்தியை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.

கத்தி அகற்றம்

இதையடுத்து மல்லிகாவுக்கு டீன் காளிதாஸ் தலைமையில் மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். 30 மணி நேரம் அவரது உடலில் இருந்த கத்தியை அகற்றினார்கள். அத்துடன் அவருக்கு நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பும் சரி செய்யப்பட்டது. தற்போது அவர் நலமுடன் வீடு திரும்பினார். 

Next Story