சென்னையில் 64 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்


சென்னையில் 64 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
x
தினத்தந்தி 18 Jun 2020 4:00 AM IST (Updated: 18 Jun 2020 1:58 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 64 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டு இருந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பின் ஒரு பகுதியாக மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் உள்ள 200 கோட்டங்களிலும் 200 உதவி என்ஜினீயர்கள், இளநிலை என்ஜினீயர்களை குழு தலைவராக நியமித்து, அவர்களுடன் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் ஆகியோரை இணைத்து மைக்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தக்குழு வைரஸ் தொற்று பாதித்தநபரை மருத்துவமனைக்கு அனுப்ப உதவி செய்வதுடன், வைரஸ் தொற்றின் தீவிரம் கருதி உடனுக்குடன் தகவல் தெரிவிப்பார்கள். மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல், முகக்கவசம், கபசுர குடிநீர் வழங்குதல் போன்ற பணிகளையும் செய்வார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எந்தவொரு அறிகுறியும் இன்றி கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நபர்கள், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த நபர்கள் அவர்களின் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 64 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க, உதவிகளை செய்ய 3,500 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குடிசைவாழ் மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால், அவர்களுடைய குடும்பமும், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள உறவினர்களும் அருகில் உள்ள தனிமைப்படுத்தப்படும் மையங்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

இதற்காக 25 ஆயிரம் பேர் தங்கக்கூடிய அளவுக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதலாக 25 ஆயிரம் தங்குவதற்கு ஏதுவாக மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story