ஏற்கனவே இ-பாஸ் பெற்றவர்கள், மறுபதிவு செய்ய வேண்டும் - சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்


ஏற்கனவே இ-பாஸ் பெற்றவர்கள், மறுபதிவு செய்ய வேண்டும் - சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
x
தினத்தந்தி 18 Jun 2020 5:56 PM IST (Updated: 18 Jun 2020 5:56 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு ஏற்கனவே இ-பாஸ் பெற்றவர்கள், மறுபதிவு செய்ய வேண்டும் எனவும் பழைய இ-பாஸ் செல்லாது எனவும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனாவால் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு இன்று மாலை 5 மணிக்கு காவல்துறையினர் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்த டிஜிபி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாலை 5 மணிக்கு காவல்துறையினர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை முதல் 30-ந் தேதி வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கடந்த முறை அமல்படுத்தப்பட்டதை விட இந்தமுறை மிக கடுமையாக ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். சென்னையில் இருந்து புறநகருக்கு செல்ல பணியாளர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்த அவர் அனுமதி  இல்லாமல் செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினார்.

சென்னையை சுற்றி 288 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வெளியே வருபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார். மேலும் சென்னையில் அண்ணாசாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மூடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசிய போது, “வெளியில் செல்பவர்கள் முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளை வீட்டின் அருகில் 2 கி.மீ தொலைவுக்குள் மட்டுமே வாங்கிக் கொள்ள வேண்டும். வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிவோர் கையுறை, கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும்.

மாவட்ட எல்லைகள் மற்றும் மாவட்ட பகுதிக்குள் கண்காணிப்பு தீவிரமாக இருக்கும். போலி இ-பாஸ் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். மேலும் 18,000 காவலர்கள் கண்காணிப்பு பணியில் இருப்பதாகவும் 10 சதவீதம் காவலர்களை காத்திருப்பில் வைத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக சொந்த ஊருக்குச் செல்ல கடந்த ஊரடங்கின் போது பதிவு செய்யப்பட்ட இ-பாஸ் தற்போது செல்லாது என்றும் புதிதாக விண்ணப்பித்து இ-பாஸ் பெற வேண்டும் என்றும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Next Story