மாவட்ட வாரியான பரிசோதனை விவரங்கள் நிறுத்தப்பட்டது ஏன்? - மு.க.ஸ்டாலின் கேள்வி


மாவட்ட வாரியான பரிசோதனை விவரங்கள் நிறுத்தப்பட்டது ஏன்? - மு.க.ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 18 Jun 2020 11:02 PM IST (Updated: 18 Jun 2020 11:02 PM IST)
t-max-icont-min-icon

மாவட்ட வாரியான கொரோனா பரிசோதனை விவரங்கள் நிறுத்தப்பட்டது ஏன் என திமு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 52,334 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் 1,373 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் மட்டும் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,070 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 49 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு இதுவரை 625 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில் போதுமான அளவில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளாதது ஏன்? என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பரிசோதனைகளை மாவட்ட வாரியாக வெளியிட கோரியும், ஒரே ஒரு முறை தான் வெளியிடப்பட்டது. பின்னர் அது நிறுத்தப்பட்டது. ஜூன் மாத நிலவரப்படி, தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் அதிக பரிசோதனைகள் நடத்தப்பட்டதோ அந்த மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனவே பரிசோதனைகளின் எண்ணிக்கையைப் பரவலாக்கி அதிகப்படுத்துவதன் மூலமே, நோய்த் தொற்றின் உண்மையான அளவைக் கண்டுபிடிக்க முடியும். 

சென்னையைத் தவிர்த்து, பிற மாவட்டங்களுக்கு சில ஆயிரம் பரிசோதனைக் கருவிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த  மாவட்டங்களில், நாளொன்றுக்கு சில நூறு பேர் மட்டுமே பரிசோதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. முதல்கட்ட ஊரடங்கின் போதே அதிக பரிசோதனைகளை செய்திருக்க வேண்டும். ஆனால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது நோய் தொற்றை குறைக்காது. அது பொருளாதார நிலையை மேலும் மோசமாக்கவே செய்யும். தமிழகத்தில் உள்ள சோதனை மையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள், தொற்று தொடர்புகள் உள்ளிட்ட விவரங்களை பொதுக்களத்தில் உடனடியாக முன்வைக்க வேண்டும்” என்றும் அதில் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Next Story